விஸ்வநாததாஸ் காலனியில் 6 மாதமாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

விருதுநகர், செப்.7: விருதுநகரில் ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் கடந்த 6 மாதகாலமாக பூட்டி கிடக்கிறது. பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2009-2010ம் ஆண்டில் பெரும்பாலான ஊர்களில் சமுதாயக் கூடங்களை கட்டமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினர். இந்தக் கட்டடங்களை, சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கும், முகாம்கள் போன்றவற்றை நடத்த பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கப்பட்டது. குறைந்த வாடகையில், இவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டன.

ஆனால பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இவை பெரும்பாலான இடங்களில் பயன்பாடின்றி மூடிக்கிடக்கின்றன.
விருதுநகர் நகராட்சி ஒருங்கிணைந்த குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு 35வது வார்டு, விஸ்வநாததாஸ் காலனியில் ரூ.21 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த பல மாதங்களாக சமுதாயகூடம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

இது குறித்து மோகன் கூறுகையில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கின்றன. பல்வேறு அரசுத்துறை விழாக்கள், கூட்டங்கள் மற்றும் முகாம்களை தனியார் மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் நடத்த வருகின்றனர். அதுபோன்ற விழாக்களை சமுதாயக் கூடங்களில் நடத்தினால்அவை பராமரிக்கப்படுவதுடன் பயன்பாட்டிலும் இருக்கும் என்றார். மூடிக்கிடக்கும் சமுதாய கூட அரங்குகளில் அரசு மற்றும் தனியார் விழாக்களை நடத்தினால் சமுதாய கூடம் முழு பயன்பாட்டுக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவர் காயம்

வீட்டிற்குள் அழுகிய உடல் மீட்பு

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்