விஷம் குடித்து துணை தாசில்தார் தற்கொலை

மேல்மலையனூர், நவ. 21: குடும்ப பிரச்னை காரணமாக துணை தாசில்தார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் (43) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இவர் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து அலுவலகம் செல்வதற்காக மேல்மலையனூருக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து அலுவலகம் செல்லாமல் மேல்மலையனூர்-வளத்தி சாலையில் இறங்கி அதே சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றார். அப்போது திடீரென தான் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தகவலை அறிந்த சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து துணை தாசில்தார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், குடும்ப பிரச்னையால், பூங்காவனம் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதுபோன்று ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நேற்று மாலை செஞ்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேல்மலையனூர் வட்டாட்சியர் முகமது அலி மற்றும் சக ஊழியர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். துணை தாசில்தார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்