விஷம் கலந்த குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக கல்லூரி மாணவி வாயில் ஊற்றிய 3 மாணவர்கள்: செருப்பால் அடித்ததால் ஆத்திரம்

திருவெறும்பூர்: திருச்சியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவரை கடந்த ஒரு மாதமாக கல்லூரி மாணவர் ஒருவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி அவர் காதலை மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால் மாணவி மறுத்து விட்டார். இந்நிலையில் 12ம் தேதி மாணவிக்கு அந்த மாணவர், உடன் படிக்கும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து வலுக்கட்டாயமாக குளிர்பானத்தை கொடுத்துள்ளனர்.பின்னர் வீட்டுக்கு வந்த மாணவிக்கு மறுநாள்(13ம் தேதி) வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன்தினம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவியின் வயிற்றில் விஷம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தது. அதன் அடிப்படையில் பெல் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மாணவியை கல்லூரி மாணவர் ஒருவர் ஒருதலையாக காதலித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக மாணவியை பின்தொடர்ந்த அந்த மாணவர் 11ம் தேதி மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வழிமறித்து காதலிப்பதாக கூறி உள்ளார். அதற்கு அவர் மறுத்ததுடன், அந்த மாணவைர செருப்பால் அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை அந்த மாணவர் மற்றும் உடன் படிக்கும் 2 பேர் கல்லூரி அருகே ஒரு ஒதுக்குப்புறமான சந்து பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். இவ்வாறு அந்த மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதுபற்றி பெல் போலீசார்  3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் குளிர்பானத்தில் என்ன வகை விஷத்தை கலந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை ஒரு ஒதுக்குப்புறமான சந்து பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர்….

Related posts

காவிரி கரையோர மக்களுக்காக மருத்துவ சிறப்பு முகாம்கள்: வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

பொன்குமார் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து வரும் 6ம் தேதி போராட்டம்

ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளை விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்