விவசாய பணியாளர்கள் மத்தியில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகரிப்பு ஏன்?: ஆராய்ச்சி விரைவில் தொடங்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:உலக சிறுநீரக தினம்-2023 முன்னிட்டு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை கூட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.  சிறுநீரக பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்நாடு சிறுநீரக செயலிழப்பு அளவீடு குறித்த கள ஆராய்ச்சி முடிவு அறிக்கையினை வெளியிட்டார்.  இந்நிகழ்வில் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன்,  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி, எழும்பூர் அரசு  குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரமா சந்திரமோகன், சிறுநீரக  துறைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், குழந்தைகள் நல மருத்துவர் னிவாசன், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; தமிழ்நாடு முழுவதுமான அளவில், விவசாயப் பணியாளர்கள் மத்தியில் சிறுநீரக நோய்த்தாக்கம் எந்த அளவில் உள்ளது என்பதைக்கண்டறிய ஓர் ஆராய்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதற்கான பொருளுதவி தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் இடமிருந்து பெறப்பட்டுள்ளது.  இந்த ஆராய்ச்சியும் சென்னை மருத்துவக்கல்லூரியின் சிறுநீரக இயல் மற்றும் சமூக மருத்துவ இயல் துறையினரால் கருத்தாக்கம் செய்யப்படவுள்ளது.  தமிழ்நாடு முழுவதுமாக, 128 அரசு மருத்துவமனைகளில் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதன்மூலம் சுமார் 7,200 நோயாளிகள் பயனடைகிறார்கள். மாதந்தோறும் 50,000 க்கும் அதிகமான ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தவிர, வயிறுரை திரவ சுத்திகரிப்பு எனப்படும் மற்றொரு டயாலிசிஸ் சிகிச்சை முறையும் இலவசமாக அளிக்கப்படுகிறது. அதற்குத் தேவையான டயாலிசிஸ் திரவப்பைகள், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்பட்டது. இந்நிலை மாறி, தற்போது பயனாளிகள் எளிதாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 216 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தற்போது 11 அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.   தற்போது வரை 88 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 297 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் என மொத்தம் 385 நபர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 94 மருத்துவமனைகளில் (அரசு மருத்துவமனை-11, தனியார் மருத்துவமனை-83) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை