விவசாய நிலத்தில் விதிமீறி அடிக்கடி மணல் திருட்டு நடவடிக்கை எடுக்காத போலீசார்

சாயல்குடி :  முதுகுளத்தூர் அருகே உலையூர் விவசாய நிலத்தில் நள்ளிரவில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி, ஒரு இருசக்கர வாகனம், திருட்டுக்கு உதவிய போலீஸ் ஒருவரை பொதுமக்கள் கீழத்தூவல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்மபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழத்தூவல், உலையூர், திருவரங்கம், மகிண்டி, பிரப்பக்களூர், சாம்பக்குளம், புழுதிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள், கண்மாய்கள், விவசாய நிலங்களில் நல்ல மணல் வளம் உள்ளது. இப்பகுதியில் அரசு மணல் குவாரி இல்லாததால், கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் மணல் கொள்ளையர்கள் இரவு,பகலாக மணல் அள்ளி கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், இளைஞர்கள் கீழத்தூவல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உலையூர் கிராம இளைஞர்கள் கூறும்போது, முதுகுளத்தூர் அருகே உலையூர் விவசாய நிலங்களில் சுமார் 10 அடிக்கு கீழ் ஆற்றுமணல் இருக்கிறது. இதனை அரசு விதிமுறைகளை மீறி, எவ்வித அனுமதியின்றி ஜேசிபி உதவியுடன் தோண்டி மணல் அள்ளி டிராக்டர்களில் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிமென்ட் சாக்கு மூட்டைகளில் அள்ளி மூட்டை கணக்கில் விற்று வருகின்றனர். இதனால் சுமார் 50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள், பள்ளி மைதானம் போன்ற பொது இடங்கள் தோண்டப்பட்டு பாளடைந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் அதிகமாக விளையும், மிளகாய், பருத்தி விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர் மணல் கொள்ளையால் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில் கோடையில் தண்ணீர் வற்றி விடுகிறது. இதனால் கோடை விவசாயமான பருத்தி விவசாயம் பாதித்து வருகிறது. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கீழத்தூவல் போலீசார், முதுகுளத்தூர் வருவாய் துறைக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நள்ளிரவில் மணல் தோண்டும்போது, மணல் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பிற்கு சீருடையில் இருந்த போலீசார் ஒருவர், ஜேசிபி இயந்திரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பிடித்து கீழத்தூவல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவும் அளித்தோம். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாய நிலங்களில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், கையும், களவுமாக காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய் துறையினர் மீதும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்,பி கார்த்திக் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு