விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன நீர்க்கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் பயிர்கள் பாழாகும் அவலம்

*நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கைபள்ளிகொண்டா :  பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட கீழாச்சூர் மற்றும் வேப்பங்கால் பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன நீர்க்கால்வாய்களில் கழிவுநீர் கலந்து செல்வதால் பயிர்கள் பாழாகி விவசாயம் பாதிக்கப்படுவாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.பள்ளிகொண்டா ஏரியிலிருந்து பாலாற்றுக்கு செல்லும் நீர்வழிக்கால்வாய் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளது. இதில்,  ரங்கநாதர் கோயில் செல்லும் தரைப்பாலம் அருகே பாலாற்றுக்கு செல்லும் நீர்வழிக்கால்வாயில் இருந்து பிரிந்து பாலாறு அடைவதற்கு முன்பே பாபுராய் கசம் கால்வாய் மூலம் பல நூற்றாண்டுகளாக விவசாய பாசன வசதிற்காக தண்ணீர் திருப்பி விடப்பட்டது.  இந்த கால்வாய் மூலம் செல்லும் தண்ணீரானது, கீழாச்சூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாய்ந்து மற்றொருபுறம் இருக்கும் கால்வாய் மூலம் ராமாபுரம், வேப்பங்கால் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றடையும். இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாயில் பாசன நீர் சென்று 500 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகின்றது. பெரும்பாலும் இந்த பகுதிகளில் கரும்பு பயிர்களை அதிகளவு விவசாயம் செய்து அதன் மகசூலை நம்பி உள்ளனர் விவசாயிகள். மேலும், ராமாபுரம், வேப்பங்கால் பகுதி விவசாயிகள் கரும்பு, நெல் சாகுபடி விவசாயத்தை நம்பி உள்ளனர். இந்த விவசாய நிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது பாலாற்றிலிருந்து வரும் பாபுராய் கசம் கால்வாய் ஏரிப்பாசன தண்ணீர் தான். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பாசன நீர்க்கால்வாயில் ஆரம்பிக்கும் மளிகை தெரு, ஒத்தவாடை தெரு, முருகேசனார் தெரு உள்ளிட்ட தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பேரூராட்சி மூலம் அமைக்கப்பட்ட கால்வாய் வழியாக பாசன நீர்க்கால்வாயில் கலந்து விடுகின்றது. இதனால், பாசனத்திற்கு செல்லும் ஏரித்தண்ணீரானது அசுத்தமடைந்து விடுவதால் பயிர்கள் பாழடைந்து விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இதுபற்றி பேரூராட்சி தலைவரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில்,  பாசன நீர்க்கால்வாயில் கழிவுநீர் கலந்து பயிர்கள் அழிந்து வருவது தாய்ப்பாலில் கலப்படம் செய்வதற்கு சமமாகும். 3 வேளை உணவில் கலப்படம் இல்லாமல் சுத்தமான, தரமான, சுவையான உணவை உண்ண வேண்டும் என எதிர்பார்க்கும் நாம் அதனை பயிர் செய்ய விவசாயிகள் படும் கஷ்டங்களை நினைத்து கூட பார்ப்பதில்லை. விவசாய நிலத்தில் விஷத்தை பாய்ச்சுவது போல் இந்த கழிவு நீரானது கலந்து வளரும் பயிரை அறுவடை செய்யும் நெல் மணிகளை உண்ண முடியுமா என ஒட்டுமொத்த விவசாயிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், பேரூராட்சி நிர்வாகமும் இந்த கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தவும், மேற்கொண்டு எங்கெங்கு கழிவுநீர் கலக்கின்றதோ அதனை சீர் செய்து மாற்று வழியினை ஏற்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெட்டுவாணம் கசம் கால்வாய் தூர்வார கோரிக்கைஇதேபோன்று வெட்டுவாணம் பாலாறு அருகே அமைந்துள்ள கசம் கால்வாய் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன நீராதரமாக விளங்குகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக இந்த கால்வாய் முழுவதும் செடி கொடிகளால் சூழப்பட்டு தண்ணீர் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கின்றது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் இந்த கால்வாயை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்த கால்வாய் தூர்வாரும் பணியினை உடனடியாக மேற்கொள்ள வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், இதுவரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில்  கால்வாயை தூர்வாரி கரை அமைத்து விவசாய நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருந்தது 10 அடி கால்வாய்! இருப்பதோ 2 அடி கால்வாய்!!ஏரியிலிருந்து பாலாற்றுக்கு செல்லும் நீர்வழிக்கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் பாபுராய் கசம் ஏரிப்பாசன நீர்க்கால்வாய் சுமார் 10 அடியில் காணப்பட்டது. இது ரங்கநாதர் கோயில் அருகில் உள்ள காந்தி சிலை பின்புறம் தொடங்கி கீழாச்சூர் வழியாக ராமாபுரம், வேப்பங்கால் விவசாய நிலங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில், தொடங்கிய இடத்திலிருந்து கீழாச்சூர் பகுதி வரை இடையே உள்ள மளிகை தெரு, ஒத்தவாடை தெருவில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கால்வாயின் அகலத்தை சுருக்கி சுருக்கி ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் தற்போது அவை 2 அடி கால்வாயாக குறுகியுள்ளது. இதே நிலைமை நீடித்தால் காலப்போக்கில் கால்வாயே காணாமல் போய்விட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை….

Related posts

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி