விவசாயியை கத்தியால் குத்தி செல்போன், பணம் பறிப்பு

விக்கிரவாண்டி, மே 18: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரங்கநாதன் (51), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆசூர் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், அவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீரை எடுப்பதற்குள் இருவரும் ரங்கநாதன் கை மற்றும் கழுத்தை பிடித்து அவர் பையில் வைத்திருந்த செல்போன், 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிக்க முயன்றுள்ளனர்.

சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் கூச்சலிட்டதையடுத்து மர்ம ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ரங்கநாதன் கண் மற்றும் உடம்பில் குத்தியும், கிழித்தும் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தியதில் ரங்கநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரங்கநாதனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயியை கத்தியால் குத்தி செல்போன், பணம் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை