விவசாயிகள் போராட்டத்தால் பாதுகாப்பு குளறுபடி; பஞ்சாப் அரசு டிஸ்மிஸ்? ஒன்றிய அமைச்சரவையில் காரசாரம்: ஜனாதிபதியிடம் மோடி நேரில் சந்திப்பு

புதுடெல்லி: தனது பஞ்சாப் பயணத்தின்போது  ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்து  விரிவாக எடுத்துரைத்தார். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு கவலை தெரிவித்த அமைச்சர்கள், பஞ்சாப் அரசின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஆவேசமாக வலியுறுத்தி உள்ளனர்.பிரதமர் மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க   காரில் சென்றபோது, விவசாயிகள் செய்த சாலை மறியல் செய்தனர். இதனால், மோடியின் கார் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது. மேம்பாலம் ஒன்றின்போது 20 நிமிடங்கள் காரில் காத்திருந்தார். பின்னர், பஞ்சாப் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு டெல்லி சென்றார். இந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் பாதுகாப்பில் பஞ்சாப் அரசு குளறுபடி செய்து விட்டதாக பாஜ குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேற்று நேரில் சந்தித்து, பஞ்சாப் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.  இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடிக்கு பஞ்சாபில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அனைத்து விவரங்களையும் ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு  என்பது அதிர்ச்சி அளிக்கிறது’ என ஜனாதிபதி  தெரிவித்தார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து ஆய்வு நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி உள்பட 2 பேர் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி இதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், ‘‘பஞ்சாப் பயணத்தை பிரதமர் பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பி சென்றது வருத்தம் அளிக்கிறது. ஆனால், இதில் எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை. இதை காரணமாக காட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய சதி நடக்கிறது,’ என குற்றம்சாட்டினார்.இதற்கிடையே, பிரதமர் மோடி  தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரும் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து கவலை வெளியிட்டனர். மேலும், இந்த குளறுபடியில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான அமைச்சர்கள் கூறியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  கூட்டத்துக்கு பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஒன்றிய உள்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. அவை கிடைத்ததும் மிகப்பெரிய அளவில், கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்,’’ என்றார்.* ஒன்றிய உள்துறை 3 பேர் குழு அமைப்பு: பிரதமர் மோடிக்கு பஞ்சாபில் நடந்த பாதுகாப்பு குளறுபடி பற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக ஒன்றிய பாதுகாப்பு செயலகத்தின் செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை, ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு அமைத்தது. ஒன்றிய உளவுத்துறை (ஐபி) இணை இயக்குனர் பல்பீர் சிங், சிறப்பு பாதுகாப்பு படையின் ஐஜி சுரேஷ் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி இதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.* மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ‘லாயர்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை நீதிபதி ரமணா இன்று விசாரிக்கிறார்.*விவசாயிகள் விளக்கம்: பஞ்சாப்பில் மோடி வருகையின்போது சாலை மறியல் நடத்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கூறுகையில், ‘சாலை மார்க்கமாக பிரதமர் வருகிறார் என பெரோஸ்பூர் சீனியர் எஸ்பி தெரிவித்தார். ஆனால், எங்களை கலைப்பதற்காகதான் அப்படி அவர் கூறினார் என நாங்கள் நினைத்தோம். அவர் சாலை வழியாக வரமாட்டார் என  நம்பினோம்,’ என தெரிவித்தார்….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்