விவசாயிகள் குறைதீர் கூட்டம் கரும்பு விவசாயிகளுக்கு பயிர்க்கடன்: கலெக்டர் வழங்கினார்

 

ராமநாதபுரம், செப். 23: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில், கரும்பு விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.2.72 லட்சத்தை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, கண்மாய்கள் தூர்வாருதல், வயல்வெளிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரிசெய்தல், ஊரணி தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்து மனுக்களை வழங்கினர்.

கூட்டத்தில் கலெக்டர் கூறும்போது, ‘‘தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்காக மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்திற்கு வறட்சி நிவாரணமாக ரூ.132 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையையொட்டி தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். பின்னர், 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2.72 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொ) ததனுஷ்கோடி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு