விவசாயிகளுக்கு அதிகம் தேவைப்படும் யூரியா உரம் தடையின்றி கிடைக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் டெல்டா மாவட்டங்களில் உரங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், பயிர்கள் பசுமை பெறுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் நைட்ரஜன் தேவை என்பதால் யூரியாவின் தேவை மிகவும் அதிகரித்து தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனை உணர்ந்த முதலமைச்சர், மத்திய உரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வெகு விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கான உரத் தேவை அதிகரித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு கூடுதல் உரம் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக உரங்களைப் பெற்று விவசாயிகளுக்கு அளிக்கும் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், விவசாயிகளுக்கு அதிக அளவு தேவைப்படும் யூரியா தங்கு தடையின்றி நியாயமான விலையில் எவ்வித நிபந்தனையுமின்றி கிடைக்க வேண்டும். எனவே, முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவும் ஏதுவாக, எந்தவிதமான நிபந்தனையுமின்றி விவசாயிகளுக்கு யூரியா மற்றும் இதர உரங்கள் நியாயமான விலையில் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். …

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு