விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி

 

ஈரோடு, ஆக.3: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரம், மாணிக்கம்பாளையத்தில் வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பவானி தலைமை வகித்தார். இதில், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் தாவர பொருள்களின் பயன்பாடு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மானிய திட்டங்கள், சம்பா பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள், உயிர் உரங்களின் பயன்பாடு, நுண்ணூட்டச்சத்து உரங்கள் பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். விதை தேர்வு முறைகள், விதை நேர்த்தி, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விதைச்சான்று அலுவலர் நாசர் அலி விளக்கமளித்தார்.

உழவர் செயலி பயன்படுத்துதல் மற்றும் மானிய திட்டங்கள் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு மண் மாதிரி ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல், ரசாயன உரங்களை குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தி, அதிக லாபம் பெறும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி