விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22% வரை அனுமதிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவின் வரம்பு 22 சதவீதம் வரை அனுமதிக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கலாம் என ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. இதேபோல், உடைந்த, மங்கிய, முளைவிட்ட நெல் பூச்சி அரித்த நெல் போன்றவை கொள்முதல் செய்யும் நெல்லின் மொத்த அளவில் ஏழு சதவீதம் வரை இருக்கலாம் என்று நிபந்தனை விதித்துள்ளது.நடப்பாண்டில் குறுவை சாகுபடி நல்ல விளைச்சல் கண்டிருப்பதாலும், சம்பா சாகுபடியும் நல்ல விளைச்சல் தரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், வடகிழக்கு பருவமழை முந்தைய ஆண்டுகளை விட கூடுதல் அளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது. இந்த இயற்கை சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருப்பதை ஒன்றிய அரசு தாமதமின்றி ஏற்று அனுமதிக்க வேண்டும். இதே அளவில் மற்ற நிபந்தனைகளையும் தளர்த்துவதுடன், விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்