விழிக்குமா ஒன்றிய அரசு?

தமிழக அரசு, போதை  பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடத்தி, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. என்னதான் தமிழக முதல்வரும், காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை  எடுத்தாலும், தமிழ்நாடு என்கிற ஒரே ஒரு மாநிலத்தால் மட்டும் அதை தடுத்து நிறுத்தமுடியாது. ஒன்றிய அரசும் இதில் முழு கவனம் செலுத்தவேண்டும் என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். ‘‘நாடு முழுவதும் போதை  பொருள் இந்த அளவுக்கு பரவியிருப்பதற்கு ஒன்றிய அரசே காரணம். குறிப்பாக, பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் போதை பொருட்கள்  அதிகம் விற்பனையாகிறது. அங்கேதான் அதிக நடமாட்டம் இருக்கிறது. குஜராத்தில்  உள்ள துறைமுகத்தை தனியார்மயமாக்கி விட்டார்கள். இந்த போதை பொருட்கள்  வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டு, அங்குள்ள துறைமுகம் வழியாகத்தான்  இந்தியாவுக்குள் நுழைகிறது. குறிப்பாக, முந்த்ரா துறைமுகம்தான் இதில் முதலிடத்தில்  இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கடத்திவரப்படும் போதை பொருட்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ எனவும் அதிரடியாக விளாசியுள்ளார். தமிழ்நாட்டில்  போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. விஜயவாடாவில் இருந்து, போதை பொருட்கள் அதிகம் கடத்தி வரப்படுகிறது. முந்த்ரா  துறைமுகத்திற்கும் விஜயவாடாவுக்கும் தொடர்பு இருக்கிறது என காவல்துறை புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தடுக்க, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரும் சுட்டிக்காட்டியுள்ளார். யாராக இருந்தாலும், உண்மை  நிலையை சுட்டிக்காட்ட சற்றே துணிச்சல் வேண்டும். கடந்த ஐந்தாண்டு  கால அதிமுக ஆட்சியில் இடம்பெற்றிருந்த ஒரு  அமைச்சர்கூட இப்படி ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கருத்தை துணிச்சலாக  எடுத்துக்கூறியது இல்லை. ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல, உண்மை நிலையை சுட்டிக்காட்டி, அந்த தவறு நடக்கவிடாமல் தடுப்பதே நமது  பிரதான நோக்கம் என்பது நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் போதை பொருட்கள்  கடத்தலை, எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்  என்பதை கண்டறிந்து, அதன்படி  இந்தியாவிலும் முனைப்பு காட்ட வேண்டும். தமிழ்நாட்டில், கடந்த 9 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 33.99 கோடி ரூபாய் மதிப்புள்ள  952.1 டன் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக அரசு  பொறுப்பேற்ற பிறகு, அரசின் நடவடிக்கை  காரணமாக ஒரே ஆண்டில் 9.19 கோடி  ரூபாய் மதிப்புள்ள 152.94 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.2.88 கோடிதான் அபராதம்  விதிக்கப்பட்டது.  ஆனால், தற்போது ஒரே ஆண்டில் ரூ.2 கோடி அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது.மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும்  எதிராக தேசிய அளவில் எழுந்திருக்கும் பிரச்னைதான் இந்த போதைப்பொருட்கள். இதனால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும்  பாதிப்புகளே ஏற்படுகின்றன. ஒட்டுமொத்த தேச வளர்ச்சியில் கவனம்  செலுத்துகிறோம் எனக்கூறும் ஒன்றிய அரசு, இந்த விஷயத்தில் தீவிர கவனம்  செலுத்தினால் நல்லது. ஒன்றிய அரசு முழுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை அடியோடு நிறுத்தமுடியும் என்பதே நிதர்சனமான உண்மை….

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

அடுத்த அசத்தல்

‘மூன்றில் ஒரு பங்கு’