விளையாட்டுக்கு ஊக்கம்

முதல்வராக பதவி ஏற்ற நாள் முதல் மு.க.ஸ்டாலின் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழ்நாட்டின், தமிழர்களின் நலன், முன்னேற்றத்துக்கான நடவடிக்கையாக இருந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது ஆட்சி பொறுப்பேற்றபோதும் குறுகிய காலத்தில் தனது அதிரடி நடவடிக்கைகளால் அதன் பரவலை கட்டுப்படுத்தினார்.  அடுத்தடுத்து, ஒவ்வொரு பிரிவினரையும் கவனித்து அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து உதவிகளை, நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர். அப்படி விளையாட்டு துறைக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  விளையாட்டு துறை என்றாலே அதை விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும் ஆட்சியாளர்கள் அதிகம். ஆனால், விளையாட்டு துறைக்கு அரசு முக்கியத்துவம் தரும் என்று உறுதியளித்துள்ள முதல்வர், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கல பதக்கம் பெற்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.   தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு நம்முடைய குழந்தைகளின் திறமைகளை ஆரம்பக் கட்டத்தில் இருந்தே கண்டறிய வேண்டியது அவசியம். இதற்காக 12 வயதுக்குள்ளாகவே, பல்வேறு விளையாட்டுகளில் திறமையான குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகளை வழங்குவதற்கு தமிழ்நாட்டை 4 பகுதிகளாகப் பிரித்து, ஒலிம்பிக் அகாடமிகள் திறக்கப்படும் என்ற முதல்வர் அறிவித்துள்ளார்.  கொரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கியதால், கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 32வது ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. அது அடுத்த மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று பல நாடுகளில் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதால் சுமார் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியா சார்பில் 135 வீரர்கள் உள்பட 190 பேர் பங்கேற்கிறார்கள். இந்த ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 17 பதக்கம் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு, தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ‘தமிழக வீரர்களே சென்று வருக! தரணியை வென்று வருக!’ என்று வாழ்த்திய முதல்வரை ஒலிம்பிக்ஸ் செல்லும் நம் வீரர்கள் பதக்கங்களோடு சந்திப்பது உறுதி. …

Related posts

அடுத்த அசத்தல்

‘மூன்றில் ஒரு பங்கு’

பாஜ அரசின் அவலம்