விளைநிலங்களில் மண் வளத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்: வேளாண் துறையினர் விளக்கம்

பழநி, ஜூன் 27: விளைநிலங்களில் மண்வளத்தை அதிகரிக்க வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் வரும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்கு தேவையான இயற்கை உரங்களை எளிதில் அளிப்பதுடன் மண்வளத்தை விவசாயிகள் பாதுகாக்க முடியும். ரபி பருவ பயிர்களை அறுவடை செய்த பின் தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு அல்லது பயறுவகை பயிர்களான காராமணி, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைக்க வேண்டும்.

பூ பூக்கும் பருவம் அல்லது விதைத்த 45வது நாள் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் போது மடக்கி உழுதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்வளம் மேம்படும். இதனால் பயிர் வளர்ச்சித்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளித்து, பயிர் சாகுபடியில் பல்வேறு நன்மைகளையும் விளைவிக்கும். மண்ணில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி, மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரித்து பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 30 முதல் 75 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது. உரச்செலவு சேமிக்கப்படுகிறது பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மக்க செய்வதால் களைச்செடிகளின் விதை முளைப்புத்திறன் பாதிக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை