விளாத்திகுளம் பகுதியில் போக்குகாட்டும் மழை கருகியது மக்காச்சோளம்; காத்திருக்கிறது மிளகாய் செடி

*வருண பகவான் கருணை காட்டுவாரா?*எதிர்பார்ப்பில் விவசாயிகள்விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் போதிய மழையின்றி மக்காச்சோள பயிர்கள் கருகியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிளகாய் செடிகளை பாதுகாக்க, பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கரிசல் பூமியான விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பருவமழையை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் மிளகாய், சோளம், மக்காச்சோளம், வெங்காயம், கம்பு, சூரியகாந்தி, மல்லி, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுவது வழக்கம். 100 நாள் பயிரான நெட்டைச் சோளம் மற்றும் 130 நாள் பயிரான மக்காச்சோளம் ஆகியவை கடந்த புரட்டாசி மாதம் நடவு செய்யப்பட்டது. ஆனால் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததால் இரு பயிர்களும் முழுமையான விளைச்சல் இல்லை. ஓரிரு இடங்களில் சாரல் மட்டுமே தூறிய நிலையில் வெயில் அக்னியும், காற்றின் வேகமும் அரைகுறையாக விளைந்த பயிர்களை கருக்கின. நெட்டைச் சோளம் விதைப்பு முதல் அறுவடை வரையில் ஏக்கருக்கு சுமார் ₹8 முதல் 10 ஆயிரம் வரை செலவாகிறது. நல்ல மழை பெய்து விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு ₹4 ஆயிரம் வரையில் லாபம் கிடைக்கும். மக்காச்சோளம் பயிரை பொருத்தவரையில் ஏக்கருக்கு சுமார் ₹8 ஆயிரம்  வரை செலவாகிறது. விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு ₹3 முதல் 5 ஆயிரம் வரையில் லாபம் இருக்கும். ஆனால் பருவமழை இல்லாததால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இந்த பகுதியில் புரட்டாசி மாதம் 10ம் தேதிக்குப் பிறகு மிளகாய் செடி விதை நடப்பட்டது. பொதுவாக ஐப்பசி 5ம் தேதி அளவில் மிளகாய் செடி முளைப்பு வந்துவிடும். ஆனாலும் தற்போது வரையில் மழை இல்லாததால் விளைச்சல் இல்லை. களைச்செடிகள் மட்டுமே வளர்ந்து காணப்படுகிறது. இதனை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து புதுகிராமம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறுகையில், விளாத்திகுளம் மற்றும் வட்டார பகுதியில் பருவமழை இல்லாததால் மக்காச்சோளம், சோளம், மிளகாய் உள்ளிட்ட விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. நகைகளை அடமானம் வைத்து வானம் பார்த்த பூமியில் விவசாய பணிகளை துவங்கியும், மழையின்றி எதுவும் விளைச்சல் இல்லை. கடந்தாண்டு கொட்டித் தீர்த்த பருவமழையால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. மிளகாய் செடி துளிர்விட துவங்கி இருக்கிறது. இதனை பாதுகாக்க மழை கட்டாயம் தேவை. இல்லையெனில் மிளகாய் விவசாயமும் இந்தாண்டு இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும்.ஏற்கனவே இருமுறை மக்காச்சோளம் விதைப்பு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களிலாவது மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாய பணியில் ஈடுபட்டு உள்ளனர், என்றார். நெட்டைச் சோளம், மக்காச்சோளம், மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கம்பு, சூரியகாந்தி, மல்லி உள்ளிட்டவை விதைப்பு செய்வதற்கு தயாராகி வரும் விவசாயிகள், வருண பகவான் கருணை காட்டுவாரா? இம்முறையாவது விவசாயம் கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.கூலி வேலையில் கிடைக்கும் சம்பள பணத்தில் விவசாயம்விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விவசாயத்தை தவிர்த்து பெரும்பான்மையான மக்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது விவசாய காலம் என்பதால், கூலி வேலையில் கிடைத்த சம்பள பணத்தை கொண்டு விவசாய பணி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வரையில் விளைச்சல் இல்லாததால் சேமிப்பு பணம் பயனற்று போய் விடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு