வில்லரசம்பட்டியில் 3 ஆடு, 15 கோழிகளை கடித்து கொன்ற நாய் கூட்டம்

 

ஈரோடு, செப். 30: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வில்லரசம்பட்டி பகுதியில் 3 ஆடு, 15 கோழிகளை நாய் கூட்டம் கடித்து கொன்றது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி, கருவில்பாறை வலசு பகுதியில் கடந்த சில நாட்களாக 5 நாய்கள் கூட்டமாக சுற்றி வந்தன. இவை, அங்குள்ள குப்புராஜ் நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை அவரது பட்டிக்குள் கூட்டமாக நுழைந்த 5 நாய்கள் அங்கு கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள், 15 நாட்டுக்கோழிகள் மற்றும் சேவல்களை கடித்துக் குதறியதில் அனைத்து பரிதாபமாக உயிரிழந்தன. இதேபோல், அதேபகுதியில் உள்ள முன்னாள் கவுன்சிலர் ஒருவரது வீட்டு தோட்டத்தில் இருந்த 3 ஆடு, 4 கோழிகளையும் அந்த நாய்கள் கடித்து கொன்றன. நாய்களின் இந்த தொடர் கால்நடை வேட்டையால் அப் பகுதி மக்கள் கடும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,“கடந்த சில நாட்களாக இப்பகுதியில் 5 நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் அவை இப்பகுதியில் உள்ள வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, கோழிகளை தொடர்ந்து வேட்டையாடி கொன்று குவித்து வருகின்றன. இந்த பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகள் அதிக அளவில் உள்ளனர். இந்த நாய் கூட்டத்தால் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை