வில்லனாகும் வெரிகோஸ் வெயின்…ஹைஹீல்ஸ் ஆபத்து!

நன்றி குங்குமம் டாக்டர் வெரிகோஸ் வெயின் என்பது கால்களில் உள்ள ரத்தக் குழாய்கள் அல்லது சிரைகள் அதன் அளவிலிருந்து வீங்குவது, பெரிதாவது அல்லது சுருண்டுகொள்வதால் உருவாகும் பிரச்சனை. வெரிக்கோஸ் வெயின் இருப்பவர்களுக்கு தோலுக்குக் கீழே அது வீங்கிச் சுருண்டிருப்பதைப் பார்க்கவும் தொட்டு உணரவும் முடியும். நீலநிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காலிலும், பாதத்திலும் இதுபோன்று இருப்பதைப் பார்க்கலாம். ரத்தம் தவறான திசையில் செல்வதன் வெளிப்பாடு இது.இந்த வெரிக்கோஸ் வெயினுக்கும் ஹைஹீல்ஸுக்கும் சம்பந்தம் உள்ளதென சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இன்று ஹைஹீல்ஸ் என்பது ட்ரெண்டி ஃபேஷனாக உள்ளது. இளம் பெண்கள் முதல் நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்கள் வரை ஹைஹீல்ஸ் அணிகிறார்கள்.ஏதாவது ஒரு விழா அல்லது பார்ட்டி என்றால் ஒரு பெண்ணின் நினைவுக்கு முதலில் வருவது ஹை ஹீல்ஸ் அணிந்து செல்வதுதான். ஆனால், ஹை ஹீல்ஸ் அணிவதில் ஒரு பிரச்னையும் உள்ளது. அது உடல்நலம் தொடர்பானது. அது கால், கழுத்து மற்றும் முதுகுவலியை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் வெரிகோஸ் வெயினுக்கும் (சுருள் சிரை நோய்) வழிவகுக்கும். கால்களில் ரத்த ஓட்டத்தை ஹை ஹீல்ஸ் கடுமையாகப் பாதிக்கிறது, அத்துடன் ஒரு நபரின் உடல் தோற்றம் இருக்கக்கூடிய அமைப்பையும் பாதிக்கிறது.ஹை ஹீல்ஸால் வெரிகோஸ் வெயின் ஏற்படுமா?ஒரு நபர் நடக்கும்போது, கால்களில் உள்ள ரத்தம் சிரைகள் வழியே மேலே செல்வதற்கு உந்துதலைக் கொடுக்கும் வகையில் கெண்டைக் கால் மற்றும் பாதங்கள் உதவுகின்றன. நரம்புகளில் உள்ள வால்வுகள் இதயத்தை நோக்கி ரத்தத்தைச் செலுத்த உதவுகின்றன. ஆனால், ஒருவர் ஹை ஹீல்ஸ் அணிந்தால், அந்த நபரின் குதிகால் தரையைத் தொடவே முடியாது. உடலின் அழுத்தமும் எடையும் கால் விரல்களிலும் முன்னங்கால்களிலும் செலுத்தப்படும். ஹை ஹீல்ஸ் அணியும்போது கெண்டைக்கால் தசைகளை தளர்த்த முடியாது என்பதால், அது கெண்டைக்காலைப் பாதிக்கிறது. இது இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக வால்வுகளில் ரத்தம் அதிகமாகச் சேரும். இது வெரிகோஸ் வெயின் நோய்க்கு வழிவகுக்கக்கூடும்.ஹை ஹீல்ஸை தூக்கியெறிய வேண்டுமா?வெரிகோஸ் வெயின் இருந்தால், ஒருவர் ஹை ஹீல்ஸ்களை தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. வெரிகோஸ் வெயின் நோய் அதிகரிப்பதற்கு ஹை ஹீல்ஸ் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவர் சில சந்தர்ப்பங்களில், சில மணி நேரத்துக்கு மட்டுமே ஹை ஹீல்ஸ்,  ஸ்டிலெட்டோக்களை அணியலாம். அத்துடன் கால்களில் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க, ஹை ஹீல்ஸை கழற்றிய பிறகு, கால்களை உயரமான நிலையில் தூக்கி வைத்திருக்க வேண்டும். ஒருவர் தூங்கும்போது கால்களுக்குக் கீழே ஒரு தலையணையை வைத்துக்கொள்ளலாம். ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முன்பும், அவற்றைக் கழற்றிய பிறகும் கெண்டைக்கால், பாதத்தை நீட்டி மடக்குவது ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க உதவும்.வெரிகோஸ் வெயின் நோயில் இருந்து விடுபட அல்லது எந்தவித பதற்றமும் இல்லாமல் ஹை ஹீல்ஸ் அணிய வேண்டுமென நினைத்தால் வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெறுங்கள். வெரிகோஸ் வெயின் நோய்க்கு மூன்று வகைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ மேலாண்மை, எண்டோவெனஸ் லேசர் – க்ளூ தெரபி, அறுவை சிகிச்சை ஆகிய மூன்று முறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவராக வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணர் இருப்பார். மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த சிகிச்சையில் ஏதாவது ஒன்றை அவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார். சிரை நிபுணர் அல்லது ஃபிளெபாலஜிஸ்ட் என்றும் வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணர் அழைக்கப்படுகிறார். ரத்த ஓட்ட அமைப்பு வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க இவர் சிகிச்சை அளிக்கிறார்.ஹைஹீல்ஸ் அணிபவர்கள் அனைவருக்கும் வெரிகோஸ் வெயின் எனும் சிரை நோய்ப் பிரச்சனை வருமென சொல்ல முடியாது. ஆனால், ஹை ஹீல்ஸ் வெரிகோஸ் வெயின் நோயைத் தீவிரமடையச் செய்யும் காரணியாக இருக்கலாம். ஹை ஹீல்ஸ் அணியும் நேரத்தைக் குறைத்துக்கொண்டால், வெரிகோஸ் வெயின் நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதைத் தவிர்க்க முடியும். மேலும் வெரிக்கோஸ் பிரச்சனை இருப்பவர்கள் இயன்றவரை ஹைஹீல்ஸ் அணியாமல் இருப்பதே ஆரோக்கியம். தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related posts

உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!

மனவெளிப் பயணம்

எலும்பியல் சிகிச்சையும் CT ஸ்கேன்களும் ஒரு பார்வை!