விலை ஏற்றம், தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அரிசி விற்பனை 40 சதவீதம் சரிவு: மொத்த வியாபாரிகள் கவலை

சேலம்: அரிசி விலை ஏற்றம், தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி போன்றவற்றால் செவ்வாய்பேட்டை, லீ பஜாரில் சீசன் வியாபாரம் 40 சதவீதம்  சரிந்துள்ளதாக மொத்த அரிசி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், சிதம்பரம், ஆரணி, திருவண்ணாமலை, செய்யாறு, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்பட  பல்வேறு பகுதிகளில் நெல் வயல்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு  ஆண்டும் இந்த பகுதிகளில் மட்டும் பல்லாயிரம் மெட்ரிக் டன், நெல் விளைகிறது.கடந்தாண்டு பெய்த தொடர் மழை காரணமாக, நடப்பாண்டு நெல் விளைச்சல் பாதித்தது. அதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழையால்,  அங்கும் நெல் விளைச்சல் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்கமாக வரும் வரத்தில் இருந்து 20 முதல் 30  சதவீதம் குறைந்தது. நெல் விளைச்சல் குறைந்ததால், 100 கிலோ அரிசி மூட்டை ₹200 முதல் ₹300 வரை விலை உயர்ந்தது.இது ஒருபுறம் இருக்க, அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கிறது. இதனால் கடந்த 26ம் தேதி முதல் தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அன்று முதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்  காரணமாக மொத்தமாக பணம் கொண்டு அரிசி மூட்டையை கொள்முதல் செய்ய சில்லரை அரிசி வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.  இதனால் சீசன் வியாபாரம் குறைந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த அரிசி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜாருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில்  இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 டன் அளவுக்கு அரிசி வரத்து இருக்கும்.  கடந்தாண்டு பெய்த மழையால், தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலும் நெல் விளைச்சல் பாதித்தது. இதனால் சேலம்  மார்க்கெட்டுக்கு 50 முதல் 100 டன் அளவுக்கு மட்டுமே அரிசி வரத்து உள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டு அரிசி மூட்டை விலை  அதிகரித்துள்ளது.இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் செவ்வாய்பேட்டை, லீ பஜாரில் சீசன் வியாபாரம் களையிழந்து உள்ளது.  பொதுவாக அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். இந்த அளவுக்கு பணம் எடுத்து  வந்தால், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் பறித்துவிடுவார்கள் என்ற பயத்தில், சில்லரை வியாபாரிகள் அரிசி மூட்டைகளை  கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடக்க வேண்டிய சீசன் வியாபாரம் 30 முதல் 40 சதவீதம்  குறைந்துள்ளது. இதுபோன்ற நிலையை போக்க வியாபாரிகள் ₹2 லட்சம் வரை கொண்டு செல்ல, தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்.  இவ்வாறு அரிசி வியாபாரிகள் கூறினர்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்