விரைவில் முதலிடம்

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடைவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் வளர்ச்சியில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கையால் முதலீடுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் தொழில்துறை சார்பில் ‘‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’’ என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் ரூ.1,25,244 கோடி முதலீட்டில் 74,898 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின. மேலும், மாநாட்டில் மாநிலத்தில் நிதித்தொழில்நுட்ப தத்தெடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ‘டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ்’ திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலீடு செய்வதன் மூலம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் வருவதற்கு முக்கிய காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மீது தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான். தமிழகம் வளர்ச்சியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்து வருகிறார். முதல்வரின் சிறப்பான நடவடிக்கையால் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் விரைவில் முதல் இடத்தை தமிழகம் பிடிக்கும். இதன் மூலம் தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் மாறும். ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும். கல்வி, மருத்துவம், விவசாயம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 இடத்தை தமிழகம் அடைய முடியும். கடந்த ஆட்சியில் நடந்த பல்வேறு சம்பவங்களால் முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதற்கே அச்சம் கொண்டனர். தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தொழில் நிறுவனங்களின் ஆரோக்கியமான கோரிக்கைகளை உடனே பரிசீலித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போட்டி போட்டு தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருகின்றன. பொய் குற்றச்சாட்டு மூலம் மக்களை திசை திருப்பி தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என சிலர் எண்ணினர். முக்கியமாக, அமைதியாக உள்ள தமிழகத்தில் பிரச்னையை ஏற்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். ஆனால், எதுவும் பலிக்கவில்லை. மக்களின் ஆதரவோடு அனைத்து சதிகளையும் முறியடித்து, அதிகளவு முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியில் விரைவில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்கும்….

Related posts

தங்க அம்பாரி

போர் உச்சக்கட்டம்

சிக்கலில் சித்தராமையா