விரைவில் இ-சேவை 2.0 திட்டம் அறிமுகம் அதிக வருவாய் வரும் துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டம்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: தமிழ்நாட்டில் 18 முதல் 23 வயது வரையிலான உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண் தொழில் முனைவோர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகப்படியாக 13.5 சதவீதமாக உள்ளது. இது திராவிட இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளின் ஒன்றாகும். தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் தொலைநோக்கு இலக்கை அடைய தகவல் தொழில்நுட்ப துறை முறையாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதில், தகவல் தொழில்நுட்பவியல் துறை 100 பில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை கொண்டுள்ளது.நாட்டின் ஐடி பொருளாதாரம் 20 மில்லியன் டாலராக உள்ளது. கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) ஆண்டுக்கு 10 சதவீதம் விகிதத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் 2030க்குள் 47 மில்லியன் டாலர் என்ற நிலையை எட்ட முடியும். தமிழ்நாட்டின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 19.6 என்ற அளவில் வளர வேண்டும். பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். 2030க்குள் 25 லட்சம் உயர் வருமானம் கொண்ட வேலைகளை உருவாக்க இந்த திட்டம் உதவும். உலகளாவிய திறன் மையங்களின் எண்ணிக்கையை 5 மடங்கு அதிகரித்து 15 முதல் 18 மில்லியன் டாலராக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது.தமிழகத்தை மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும் போது ஓசூர், திருச்சி, கோவை, கன்னியாகுமரி போன்ற 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களுக்கு உலகளாவிய நிறுவனங்கள் முன்னிலை அளிக்கும். தமிழ்நாட்டில் புதிதாக தங்கள் அலுவலகங்களை அமைக்கும் நிறுவனங்களுக்காக ஒரு குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதிக வருமானம் வரும் துறைகளில் வேலைவாய்ப்பை பெருக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 200க்கும் மேற்பட்ட ஆன்லைன் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க உதவுவதோடு சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை மேமப்டுத்தவும் உதவும்.வரும் காலங்களில் புதிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தற்போதுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து அவர்களை பில்லியன் டாலர் வருவாய் நிறுவனங்களாக உருவாக்குவது, புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதோடு 1:10 மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கிட முடியும். இந்தியாவில் பெங்களூர், மும்பைக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிக தரவு மைய திறன் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப பகுதிகளில் அதிக முதலீடுகளை நம்மால் நிச்சயமாக ஈர்க்க முடியும்.படையாற்றல் சேவைகள், விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான கொள்கைகள் வகுக்க அரசு முடிவு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறை தமிழ்நாட்டு மின் ஆளுமை முகமை ஐடி நண்பன் என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியது. இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சாலை பகுதியில் தீம் பார்க், சைக்கிள் ஓட்டும் கிளப்புகள், வார இறுதி சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்த அதுசார்ந்த துறைகளுடன் முயற்சி மேற்கொள்ளப்படும். இ-சேவை 2.0 என்ற திட்டம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் 300 சேவைகள் வழங்கப்பட உள்ளது. இ-சேவைக்கு என்ற தனியாக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு செய்து அதன்மூலம் பலமுறை சேவைகளை பெற முடியும். குறுந்தகவல் மூலம் சேவை விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும். அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு சேவை கட்டணங்களை டெபிட், கிரெடிட் அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.தரவு தூய்மை திட்டத்தை நடைமுறைபடுத்த தகவல் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தரவுத்தூய்மை திட்டம் மூலமாக பல்லாயிரம் கோடி அரசுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களில் குடிமக்கள் ஒவ்வொருவரும் தான் எந்த திட்டத்திற்கு தகுதியுடையவர் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில குடும்ப தகவல் தொகுப்பு என்ற மென்பொருள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தரவுகளின் அடிப்படையில் அரசு மக்களை தேடிசென்று திட்டங்களை வழங்கும் என்பதை இத்திட்டத்தின் மூலம் அரசு உறுதி செய்யும். கிடப்பில் உள்ள பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மிகவிரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 தொகுப்புகளில் 3 தொகுப்புகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு களப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை