விருப்ப மனு தாக்கல் செய்ய ஆட்களை பிடித்த இலை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கூட்டணி மிதப்பில் வார்டுகளை கோட்டைவிட்ட இலை கட்சி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவில் மாநகராட்சியில உள்ள 52 வார்டுகளுக்கு நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை ரெடியாக இருக்கு என்று மாவட்ட நிர்வாகிகள் இலை தலைமைக்கு ஐஸ் வைத்தாங்களாம். சரி பட்டியல் அனுப்புங்க என வேட்பாளரை அறிவிச்சிடலாம்னு கட்சி தலைமை கேட்டதாம். இதனால அதிர்ந்துபோன இலை நிர்வாகிகள் லிஸ்ட் போட்டு பார்த்தபோது கூட்டணியில் தாமரைக்கு போகும் இடங்களை இவங்களே தீர்மானம் செய்து, 5 வார்டுகளில் இருந்து யாரிடமும் விருப்ப மனுவே வாங்கலையாம். இதுல நாகர்கோவில் மாநகராட்சி 23 வது வார்டு பகுதி, மாவட்ட செயலாளர் இருக்க கூடிய வார்டாம். அந்த வார்டுக்கும் யாருமே விருப்ப மனு கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். எப்படியும் கூட்டணிக்கு தான் போகும் என்ற நினைப்பில் மாவட்ட செயலாளரும் அமைதியாக இருக்க கடைசியில் கூட்டணி உடைந்ததால், அவசர, அவசரமாக வேட்பாளரை தேட தொடங்கி உள்ளனர். அதுல சிலருக்கு கரன்சி ஆசை காட்டி விருப்பமனு வாங்கி இருக்கிறார்களாம். தலைமை வலிமையாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா என்று இலை தொண்டர்கள் விரக்தியோடு பேசி வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சீட்டே கேட்காதவர்களுக்கு சீட் கொடுத்தும் மகிழ்ச்சியில் இல்லையாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மாம்பழ கட்சி வேட்பாளர்கள் பட்டியல்  வெளியாகியிருக்காம். இந்த பட்டியலில், தனக்கு சீட்டே வேணாமுனு தோல்வி பயத்தில் கலங்கிய கட்சி நிர்வாகிகள் முப்பதுக்கும் மேற்பட்டோரை வேட்பாளர்களாக தலைமை களம் இறக்கி விட்டிருக்காம். தனித்து நிற்பதாலும், செலவிற்கு பணம் இல்லாததாலும் சிலர் நேரடியாகவே தலைமை நிர்வாகிகளிடம்  எங்களுக்கு சீட் வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. ஆனாலும், உள்ளூரு மாம்பழ எம்எல்ஏ, எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேனு தைரியம் சொல்லி, அவர்களையெல்லாம் களம் இறக்கியிருக்காராம். இருந்தாலும் ஒருவித பீதியில் மாம்பழ வேட்பாளர்கள், நகரில் வலம் வாராங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கையில காசு… வாயில தோசை என்ற பார்முலாதான் கோவையில் கொடி கட்டி பறக்குதாமே, உண்மையைச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இ-சேவை மையம் இயங்குகிறது. இங்கு, மக்களுக்கு தேவையான பிறப்பு- இறப்பு சான்றிதழ், சர்வே தொடர்பான சான்றிதழ் உள்பட பல்வேறு வகையான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியர் கொரோனா தொற்று காரணமாக விடுமுறையில் சென்று விட்டார். இவருக்கு பதிலாக இளைஞர் ஒருவரை நியமிச்சு இருக்காங்களாம். இவர், ஒவ்வொரு சான்றிதழுக்கும் 200 ரூபாய் பார்த்து விடுகிறாராம். துட்டு வெட்டவில்லை என்றால் இவரிடமிருந்து சான்றிதழ் வாங்கவே முடியாதாம். புதுசா வந்த இந்த ஊழியர், பல எக்ஸ்பீரியன்ஸ் ஊழியர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி கல்லா கட்டுவதில் முன்னிலையில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வெயில் வாட்டி எடுக்கும் ஊரில் இலை தலைமையை, நிர்வாகிகள் வாட்டி எடுக்கிறார்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்தில் இலை கட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நேர்காணல் நடந்தது. இதில் எவ்வளவு செலவு செய்வீர்கள். கட்சியில் பின்புலம், சமூக பலம் என பல கேள்விகளை நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டதாம். ஆனாலும் வெயிலூர் கார்ப்பரேஷனில் பல வார்டுகளில் போட்டி போட ஆளே இல்லாம அல்லாடுதாம் இலை கட்சி. குறிப்பாக 4வது மண்டலத்துல ‘‘புரம்’’னு முடியும் பகுதியில கட்சி மானத்தை காப்பாத்தவாவது நில்லுங்க. தோத்தாலும் பரவாயில்லை, அப்டினு சொல்லி கட்சிக்காரங்களை மாவட்ட நிர்வாகிங்க டார்ச்சர் பண்றாங்களாம். அதேபோல் ‘‘பென்’’னில் ஆரம்பமாகும் பேரூர்லயும் இலை கட்சியில ஆளே இல்லையாம். 10 வருஷமா ஆட்சியில இருந்த நம்ம நெலமை இப்படி ஆயிடுச்சேனு இலை கட்சி ரத்தங்கள் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பணக்கார நபருக்கு சீட் கொடுத்தது, இலை கட்சி விசுவாசிகளை ரத்தம் கொதிக்க வைத்துள்ளதாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பருத்தி சீமை மாவட்டத்தில் இலை கட்சி படுவீக்காக இருந்து வருகிறதாம். இனி, எந்த முயற்சி எடுத்தாலும் இலை கட்சி தேறதாம். இதை கருத்தில் கொண்ட இலை கட்சி, பிரபல தொழில் அதிபரின் மனைவியை நகராட்சி தலைவர் பதவிக்கு களமிறக்க முடிவு செய்துள்ளதாம். இந்த தகவல் மாவட்டத்தில் உள்ள இலை கட்சிக்காரர்களுக்கு தெரிந்து விட்டதாம். பல ஆண்டுகளாக கட்சியில் இருந்தும், எங்களுக்கு தேர்தலில் நிற்க சீட் தராமல், தொழில் அதிபரின் மனைவிக்கு சீட் கொடுப்பது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்களாம். இதனால் தலைமையின் மீது இலை கட்சி நிர்வாகிகள் கொதிப்பு அடைந்துள்ளார்களாம். தொழில் அதிபரின் மனைவிக்கு சீட் கொடுத்தால், அதிகளவு ‘விட்டமின் ப’ செலவழிப்பார் என்பதால், சொந்த கட்சிக்காரர்களுக்கு அல்வா கொடுத்து விட்டு தொழில் அதிபரின் மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டதாக மாவட்டம் முழுவதும் இலை தொண்டர்கள் கொதிப்புடன் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. …

Related posts

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா