விருத்தாசலத்தில் துணிகரம் விவசாயி வீட்டில் 40 பவுன் நகை, ₹70 ஆயிரம் கொள்ளை

விருத்தாசலம், ஜன. 21: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட மணலூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன்(68), விவசாயி. இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் தனது மனைவி விசாலாட்சியுடன் தனியாக வசித்து வருகிறார். சிதம்பரத்தில் உள்ள தனது 2வது மகளின் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக கடந்த 17ம் தேதி தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சிதம்பரம் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக அருகில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் சுப்புராயனுக்கு போன் மூலம் கூறியுள்ளார். இதையடுத்து சுப்புராயன் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள் படுக்கை அறையில் இருந்த இரண்டு பீரோக்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சுப்புராயன் வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன் தினம் இரவு வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். தொடர்ந்து சமையலறையில் இருந்த பீரோவின் சாவிகளை எடுத்து படுக்கை அறையில் இருந்த பீரோக்களை திறந்து நகை பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பின் பக்க கதவின் பூட்டை உடைத்து அதன் வழியே வெளியேறி சென்றுள்ளனர். மேலும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் செல்வராஜ் குடும்பத்தினர் வெளியே வரக்கூடாது என கருதி அந்த வீட்டு கதவின் வெளிப்பக்க தாழ்பாளை பூட்டியுள்ளனர்.

விடிந்ததும் செல்வராஜ் குடும்பத்தினர் வீட்டின் கதவை திறக்க முயன்ற போது திறக்க முடியாததால் அருகில் இருந்தவர்களை போன் மூலம் அழைத்து கதவை திறந்து உள்ளனர். அதன் பிறகு வெளியே வந்து பார்த்தபோது சுப்புராயன் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும், கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவர் காயம் பேரணாம்பட்டு அருகே

மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவில் 3 ஆயிரம் பேர் திரண்டனர் 100 ஆடுகளை பலியிட்டு வீடுதோறும் கறி விருந்து தொங்குமலை காளியம்மன் கோயிலில் கோலாகலம்

ஆடுகளின் விலை உயர்ந்து ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் ஒரு ஜோடி ₹40 ஆயிரத்துக்கு விற்பனை ஒடுகத்தூர் வாரச்சந்தையில்