விருதுநகர் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நுழைவு வாயில், டிக்கெட் கவுன்டர் அமைக்க கோரிக்கை

விருதுநகர், ஜன. 1: விருதுநகர் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் பயணிகள் வந்து செல்லும் வகையில் நுழைவு வாயில் மற்றும் பயணச் சீட்டு வழங்குமிடம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் பாண்டியன் நகர், அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, பேராசிரியர் காலனி, கம்மாபட்டி, அம்பேத்கர் நகர், எல்.பி.எஸ்.நகர், படேல் சாலை, சத்தியமூர்த்தி சாலை, பேராலி சாலை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாள்தோறும் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஊர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த சில மாதத்திற்கு முன்பு வரை கிழக்கு பகுதியில் உள்ள இரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குட்செட் ரோடு வழியாக இரயில் நிலையத்திற்கு சென்று வந்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம் இப்பாதையை திடீரென சுவர் கட்டி அடைத்துள்ளது.

இதனால், கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பயணிகள் சுமார் 2 கி.மீ தூரம் வரை சுற்றி இரயில் நிலையத்திற்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல் மற்றும் நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே, பிற முக்கிய ரயில் நிலையங்களில் உள்ளது போல், விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நுழைவு வாயில் மற்றும் அங்கு பயணச் சீட்டு வழங்குமிடமும் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் மதுரை எம்.பி சு.வெங்கடேசனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்