விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக்குழு கூட்டம்

விருதுநகர், செப்.28: விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்றிய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-2024ம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கண்காணிப்புக் குழுத்தலைவரும் விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை வகித்தார்.

கலெக்டர் ஜெயசீலன், எம்.பி.க்கள் தனுஷ் குமார், நவாஸ்கனி, எம்.எல்.ஏக்கள், அசோகன், ரகுராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை எம்.பி அறிவுறுத்தினார். மேலும், திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்

இக்கூட்டத்திற்கு பின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘‘அதிமுக – பாஜ கூட்டணி தற்போது பிரிந்து விட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களிடம் கேட்டால் மோடி என்று தான் சொல்வார்கள். தமிழக மக்கள் இந்தியா கூட்டணியை தான் மிகப்பெரிய வெற்றியடைய செய்வார்கள். அவர்களது நாடகம் தமிழ்நாட்டில் செல்லாது. இந்தியா கூட்டணி கட்சி பிரதமர் வேட்பாளரை அனைத்துக் கட்சிகளும் இணைந்து அமர்ந்து பேசி முடிவு செய்து அறிவிப்போம். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு தயாராக இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்த பசவராஜ் பொம்மை, எடியூரப்பா இருவரும் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகின்றனர். போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு தேவையில்லாத பிரச்சனையை கிளப்புகின்றனர். இரண்டு மாநிலங்களிலும் இரண்டு முதல்வர்களையும் அவமதிக்கும் வகையில் நடைபெற்ற போராட்டம் கண்டிக்கத்தக்கது. ஆணையம் கூறியுள்ளபடி நமக்கு தண்ணீர் திறந்து விடப்படும். கர்நாடக பாஜ ஆடுகின்ற நாடகத்தில் தமிழக மக்கள் விழுந்து விடக்கூடாது. தமிழக விவசாயிகளின் நலனை தமிழக காங்கிரஸ் என்றும் விட்டு கொடுக்காது’’ என்றார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்