விருதுநகர் மாவட்டத்தில் சுங்கச்சாவடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரிக்கை

விருதுநகர், செப்.7: விருதுநகர் மாவட்ட எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும், சுங்கச்சாவடியை அகற்றிடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்ப்புலிகள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஆதித்தமிழர் கட்சி, திராவிடர் கழகம், தலித் விடுதலை இயக்கம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பாக வெயிலுமுத்து மற்றும் எட்வர்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாலமுருகன் மற்றும் முத்துக்குமார், சமத்துவ மக்கள் கட்சி சார்பாக மணிமாறன், தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக விடியல் வீரப்பெருமாள், தலித் விடுதலை இயக்கம் சார்பாக பீமாராவ், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சுரேந்திரன், திராவிடர் கழகம் சார்பாக நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், கொள்ளைக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீது நன்னடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், வச்சக்கரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, போதை, சட்ட ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை சிறப்பான முறையில் கையாண்டு பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற நேரடியாக சார்பு ஆய்வாளராக பணியமர்த்தப்பட்ட அங்காள ஈஸ்வரனை பணியிட மாறுதல் செய்ததை மறுபரிசீலனை செய்து பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், விருதுநகர் மாவட்ட எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும், சுங்கச்சாவடியை அகற்றிடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் அரியர் கட்டணங்களை உயர்த்தி ஏழை எளிய மக்களின் கல்வியை முடக்கும் முயற்சியை கைவிட வேண்டும். உயர்த்திய கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும். போராடிப்பெற்ற சுதந்திர இந்தியாவின் பெயரை ஒன்றிய அரசு தனது சுயநலத்திற்காக மாற்ற முயற்சிப்பதை வன்மையாகக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 18ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்