விருதுநகர் மாவட்டத்திலும் வீடுகள் தோறும் ரூ.1000 நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்ட் வழங்க கோரிக்கை

 

விருதுநகர், ஜன.5: விருதுநகர் மாவட்டத்திலும் புயல் மழை பாதிப்பிற்கு வீடுகள் தோறும் ரூ.ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்பி லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமையில் நேற்று மனு அளித்தனர். மனுவில், தமிழகத்தில் நவ.3ல் பெய்த புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக டிச.17 முதல் 19 வரை தென் மாவட்டங்களில் பெய்த கடும் மழை பொழிவால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டு கண்மாய்கள் உடைந்து பயிர்கள் சேதமடைந்து, கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டது. அதே போல் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் கன மழையால் கண்மாய்கள் உடைந்து மானாவாரி பயிர்கள் சேதம், கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி, சென்னை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களையும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது. பயிர்கள் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்புக்கும் விருதுநகர் மாவட்டத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு வழங்குவது போன்று விருதுநகர் மாவட்டத்திலும் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக வீடுகள் தோறும் ஆயிரம் ரூபாய் அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்