விருதுநகரில் முக்கிய சாலையில் திடீர் பள்ளம் உடனடியாக சரி செய்ய கோரிக்கை

 

விருதுநகர், பிப். 16: விருதுநகரின் முக்கிய சாலையான ராமமூர்த்தி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமமூர்த்தி சாலை விருதுநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். அல்லம்பட்டி முக்கு ரோடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை சாலை, காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய பகுதிகளுக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அதில் கடந்த நவம்பரில் அடைப்பு ஏற்பட்டது. எனவே, அதை அகற்றும் பணியில் இயந்திரங்கள் மூலம் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சாலையின் நடுவே சுமார் 3 அடி அளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றப்பட்டு, அங்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டதோடு, நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைத்தனர்.

இந்தநிலையில், அதே பகுதியில் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. அதை அகற்றும்போது, தற்போது மீண்டும் அப்பகுதியில் சுமார் 3 அடி விட்டத்தில் 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பாதாள சாக்கடை அடைப்புகளை இயந்திரம் மூலம் நீக்கும் போது, அதிலிருந்து வெளியேறும் காற்று மற்றும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக இப்பள்ளங்கள் ஏற்படுகிறது என நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, அச்சாலையை உடனடியாக சீரமைத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டுமெனவும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை