விருதுநகரில் கொட்டித்தீர்த்த கோடை மழை சிவகாசியில் 73 மி.மீ. பதிவு

விருதுநகர், ஏப். 14: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் கோடை மழை பரவலாக கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சிவகாசியில் 73.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மதிய வேளையில் மக்கள் வீடுகளில் முடங்கிவிடுவதால் சாலைகளில் வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட குறைந்தது. பகலில்தான் இப்படி என்றால் இரவில் வீடுகளில் அதிக வெப்பம், புழுக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் கோடை மழை பெய்தது.

குறிப்பாக விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதில் அதிகபட்சமாக சிவகாசியில் 73.50 மி.மீ. வரை மழை பெய்துள்ளது. வெயிலின் கொடூர தாக்கத்தால் பரிதவித்து வந்த மக்களுக்கு திடீர் மழை வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: விருதுநகர் – 26, சிவகாசி – 73.50, ராஜபாளையம் – 18, காரியாபட்டி – 38.40, வில்லிபுத்தூர் – 37, சாத்தூர் – 27, பிளவக்கல் பெரியாறு – 2, வத்திராயிருப்பு – 3.40, வெம்பக்கோட்டை – 40.60, அருப்புக்கோட்டை – 5 மி.மீ. என்ற அளவில் மழை பெய்துள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை