விராலிமலையில் நடைபாதை, தள்ளுவண்டி கடைகளை வரைமுறைபடுத்த வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

விராலிமலை, ஏப்.13: விராலிமலை பகுதிகளில் இயங்கிவரும் நடைபாதை, தரைகடைகளை வரைமுறைபடுத்தி குறிப்பிட்ட சிறிய தொகையை அவர்களிடம் வசூல் செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கினால் எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்கள் வியாபாரம் செய்வதோடு ஊராட்சி நிர்வாகமும் வருவாயை ஈட்டி அத்தொகைகளை மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விராலிமலை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் ஊராட்சி வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த கட்டிடம், வாடகை கட்டிடம் என வணிக கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களை பொருத்தவரை கட்டிடத்திற்கு அட்வான்ஸ், மாத வாடகை, ஊராட்சி நிர்வாகத்திற்கு வரி என வருடத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரி செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகளின் கடைகளில் விற்கப்படும் பழம், பூ, பழச்சாறு, சிறிய பெட்டிகடை,சைக்கிள் பழுது நீக்கும் கடை, குழந்தைகள் விளையாட்டு பொம்மை விற்பனையகம், காலணி தைக்கும் கடை உள்ளிட்ட நுகர்வோர் பயன்படுத்தும் உணவு பொருள், வாகன உதிரிபாகம் விற்பனை கடை என இதுபோன்றே தரைகடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்பட்டு வருவதால் சாதாரண மற்றும் பண்டிகை காலங்களில் தங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். நகர் பகுதியை பொருத்தவரை தள்ளுவண்டி கடைகள், தரைகடைகள் என்பது தவிர்க்கமுடியாத வியாபார கடைகளாக பெருகி வருகிறது. இதை சரிசெய்ய உள்ளூர் நிர்வாகம் யாருக்கும் எந்த ஒரு இடையூறு இல்லாத நிலைக்கு நகர வேண்டும் என்பது தற்போது அத்தியாவசியமாகிறது.

இந்த நிலையில் தான் ஊராட்சி நிர்வாகம் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்ற கருத்துருவை கையில் எடுக்கவேண்டும் என்பது நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையில் தனித்துவம் பெற்றவர்களின் கருத்தாக உள்ளது. அதன்படி, இத்திட்டத்தை பொருத்தவரை மூன்று பேரும் பயன்பெறுவார்கள் என்பதால் இத்திட்டத்தை எளிதாக நடைமுறைபடுத்த முடியும் அதாவது ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள், வியாபாரிகள் என்பதால் இதை செயல்படுத்துவதில் உள்ளூர் நிர்வாகத்திற்கு எந்த ஒரு சிரமமும் இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இத்திட்டத்தின் முதல் தொடக்கமாக நிர்வாகம் வியாபாரிகளை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் ஒன்று நடத்தி அதன் மூலம் அவர்கள் வழங்கும் வாடகை, வரைமுறை குறித்தான ஆலோசனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டம் மூலம் பெறப்பட்ட கருத்துகளை மாவட்ட நிர்வாகம் கருத்துருவாக்காம் செய்து அதன் மூலம் இத்திட்டத்தை எளிதாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்பதே நிர்வாகம், நிதி மேலாண்மை சார்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

Related posts

ஆலஞ்சோலை அருகே மலைப்பாம்பு சிக்கியது

அருணாச்சலா கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மார்த்தாண்டம் அருகே பிளஸ் 1 மாணவி திடீர் மாயம்