விமான பணிப்பெண்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பயிற்சி: தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரி: இந்தியாவில் முதல் முறையாக 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சர்வதேச சதுரங்க (செஸ்) கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய சதுரங்க (செஸ்) கூட்டமைப்பு இணைந்து நடத்துகின்றன. இப்போட்டி குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் ஜோதி பிரசார குழு மூலமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்து வருகிறது. கடைசியாக இந்த பிரசாரக்குழு சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு சென்றடையும். இந்த செஸ் பிரசார ஜோதி நேற்று மாலை புதுவை வந்தது.செஸ் ஜோதியை கிராண்ட் மாஸ்டர் ஆகாஷ் குழுவினருடன் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பாக தமிழகத்தில் நடைபெறுவது நமக்கு பெருமை. நேற்று விமானத்தில் நடைபெற்ற சம்பவத்தில், மருத்துவராக ஒருவரது உயிரை காப்பாற்றினேன் என்ற மனநிறைவு எனக்கு கிடைத்தது. அவர் ஏடிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது உயிரை காப்பாற்றியதற்காக நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதனால் விமான பணி பெண்களுக்கு முதலுதவி சிகிச்சை கொடுப்பதில் பயிற்சி கொடுக்க வேண்டும்.ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நாம் மருத்துவரா என்று கேட்பார்கள். ஆனால் விமானத்தில் மருத்துவர்கள் செல்கிறார்களா? என்று தெரியாது. எனவே, விமானம் கிளம்புவதற்கு முன்பாக யாரெல்லாம் மருத்துவர்களாக இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக விமான பணி பெண்ணுக்கு தெரிந்தால் என்ன உதவி வேண்டுமானாலும் அவர்களிடம் பெற முடியும். அதேபோல் விமானத்தில் மருத்துவ உபகரணங்களை உடனடியாக எடுத்து சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்க வேண்டும் என விமானத்துறைக்கு ஆலோசனை கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்