விபசார வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரபல பாலியல் புரோக்கர்களிடம் லட்சக்கணக்கில் இன்ஸ்பெக்டர்கள் லஞ்சம்: சாம் வின்சென்ட், சரவணன் குறித்து எப்ஐஆரில் பரபரப்பு தகவல்

சென்னை: விபசார வழக்கில் கைது செய்யாமலும், தடையின்றி தொழில் செய்யும் வகையில் பிரபல பாலியல் புரோக்கர்களான டெய்லர் ரவி மற்றும் பூங்கா வெங்கடேசனிடம் லட்சக்கணக்கில் இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் பணம் பெற்றது லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அக்பர் அகமது கடந்த 15ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்று அளித்தார். அதில், விபசார தடுப்பு பிரிவில் கடந்த 2018ம் ஆண்டு பணியாற்றிய இன்ஸ்பெக்டர்களான சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் அவர்களின் பணி காலத்தில் சென்னை முழுவதும் தடையின்றி பாலியல் தொழில் நடக்கும் வகையில் மிகப்பெரிய பாலியல் புரோக்கர்களான டெய்லர் ரவி மற்றும் பூங்கா வெங்கடேசனுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 8.1.2018 மற்றும் 15.5.2018 ஆகிய காலத்தில் மாநகர காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளான பாலியல் புரோக்கர்கள் டெய்லர் ரவி மற்றும் பூங்கா வெங்கடேசன் ஆகியோரிடம் பல லட்சம் லஞ்சம் பெற்றது உறுதியானது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சாம் வின்சென்ட் மற்றும் அரும்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சரவணன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக சாம் வின்சென்ட் வசித்து வரும் கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பு மற்றும் கொரட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சரவணன் வசித்து வரும் புழுதிவாக்கம் ஜெயலட்சுமி நகரில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் சாம் வின்சென்ட் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள 17 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் சரவணன் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள 8 ஆவணங்கள் பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைத்திருந்த ₹18.50 லட்சம் பணம், ₹2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.டெய்லர் ரவி மாநகர காவல் துறையின் ஏபிளஸ் ரவுடி பட்டியலில் உள்ளவர். பல்வேறு குற்ற வழக்கில் மாநகர காவல் துறையால் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளியாக இருந்தவர். டெய்லர் ரவியை கடந்த 2018 நவம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.கடந்த 2019ம் ஆண்டு சென்னையின் பிரபல பாலியல் புரோக்கர் பூங்கா வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் விபசார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக இருந்து சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் பாலியல் தொழில் தடையின்றி நடக்க பல லட்சம் பணம் லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.மேலும், மாநகர காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டெய்லர் ரவியுடன் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.இவர்கள் பணிக்காலத்தில் பிரபல பாலியல் புரோக்கர் டெய்லர் ரவி மீது தலைமறைவு குற்றவாளியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் பூங்கா வெங்கடேசன் மீது இவர்கள் எந்த வழக்கும் பதிவு செய்ய வில்லை.இரண்டு புரோக்கர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இரண்டு இன்ஸ்பெக்டர்களும் பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளனர். மேலும் விபசார தடுப்பு பிரிவில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகும் இன்ஸ்பெக்டர்களான சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் தொடர்பில் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீதும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு அண்ணாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்

டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாததால் விரக்தி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு