விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்

தாம்பரம், செப்.17: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கும் நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று ஒரே நேரத்தில் 5000 பேர் குவிந்ததால் பரபரப்பு
நிலவியது. பீகார், ஒடிசா, உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா என வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளிகள் லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டிற்கு வந்து கட்டிடப் பணிகள், தொழிற்சாலைகள், துணிக்கடைகள், ஹோட்டல்கள், சிறு வியாபாரங்கள் என பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் நாளுக்கு நாள் வடமாநில தொழிலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதில் குறிப்பாக சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளிகள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கி அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 18ம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மற்றும் பீகாரில் சத்து பூஜா எனும் திருவிழாக்கள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வடமாநில தொழிலாளிகள் ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவ்வாறு செல்லும் வடமாநில தொழிலாளிகளுக்கு, ரயில்வே துறை சார்பில் நேற்று தாம்பரம் – ஜஷிடித் பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் 5000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறப்பு ரயிலில் முட்டி மோதிக்கொண்டு ஏறியவர்கள், அனைவரும் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

Related posts

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது

கற்பகம் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.