விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு போலீசில் புதிதாக மனு அளிக்க உத்தரவு

மதுரை, ஆக. 29: தென்காசியில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கில் புதிதாக மனு அளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த பழனிவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தென்காசி மேல மாசி வீதியில் அமைந்துள்ள தென் பொதிகை பாலவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 17 மாலை 5 மணி முதல் செப். 19 மாலை 5 மணி வரை கோயில் முன்பு விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யவும், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து யானை பாலம் சிற்றாறு நதியில் விநாயகர் சிலையை கரைக்கவும் அனுமதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி டி.நாகார்ஜூன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘ஏற்கனவே மனுதாரர் தரப்பால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அனுமதி தரக்கூடாது’’ என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் மனுதாரர் தரப்பில் அனுமதி கோரி போலீசாரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அந்த மனு திருப்தி அளிக்கும் பட்சத்தில் அதை பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை