விதிமீறி கட்டுமான பணி மேற்கொண்ட 347 இடங்களில் கட்டுமான பொருட்கள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 347 இடங்களில் இருந்து, கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் பல இடங்களில் மாநகராட்சி அளித்த கட்டிட அனுமதியை மீறி, கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. எனவே,  மாநகராட்சி அனுமதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார். இவ்வாறு நோட்டீஸ் வழங்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள், விளக்கம் அளிக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை மூடி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்.அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15  மண்டலங்களிலும் கடந்த 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு  மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டிட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் 245 உரிமையாளர்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 203 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என  நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின்னர், கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 14 கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. கட்டிட அனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் கட்டுமானப் பணியை நிறுத்த குறிப்பாணை வழங்கிய பிறகும் கட்டிட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 347 கட்டுமான இடங்களில் கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.எனவே, கட்டிட உரிமையாளர்கள்  அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டிடங்களை கட்ட வேண்டும்.  விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைப்பதற்கான உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்