விடுதலையில் இதுவரை கேட்காத இசை இருக்கும்: இளையராஜா உறுதி

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள படம், ‘விடுதலை’. கதையின் நாயகனாக சூரி, புரட்சிகரமான வாத்தியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மற்றும் பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பவானி நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இளையராஜா பேசும்போது, ‘இதுவரை 1,500 படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். அப்படி என்றால், 1,500 இயக்குனர்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். அவர்களிடம் எல்லாம் பார்க்காத ஒரு விஷயத்தை வெற்றிமாறனிடம் பார்க்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் ஒவ்வொரு கோணத்தில் திரைக்கதை சொல்கிறார். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த முக்கியமான ஒரு இயக்குனரான அவரைப் பாதுகாக்க வேண்டும். ‘விடுதலை’ படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையைக் கேட்கலாம். இதுவரை இதுபோன்ற கதைக்களத்தை தமிழ் சினிமாவில் பார்த்திருக்க முடியாது’ என்றார். வெற்றிமாறன் பேசும்போது, ‘எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளேன். முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் போர்ஷன் குறைவாகவும், 2ம் பாகத்தில் முழுமையாகவும் இருக்கும். 45 நிமிடங்கள் படமாக்கிய காட்சியை ஒளிபரப்பிக் காட்டிய பிறகுதான் இளையராஜா இசை அமைக்க ஒப்புக்கொண்டார். ‘வழிநெடுக காட்டுமல்லி’ என்ற பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். அவரது அலைவரிசையும், எனது அலைவரிசையும் ஒன்றாக இருந்தது. 8 நாட்கள் மட்டுமே என்று சொல்லி விஜய் சேதுபதியை படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று, 65 நாட்களுக்கு மேல் நடிக்க வைத்துள்ளேன். இளையராஜா தமிழ் சினிமாவின் சொத்து. அவரால் ‘விடுதலை’ படம் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. விபத்து, காயம் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்த சூரிக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்’ என்றார். விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுகா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு