விசாரணைக்கு கால நிர்ணயம் வைக்க கூடாது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல புதிய தகவல் தெரிய வந்துள்ளது: ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளது என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.2017ல் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனது. இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டு  விசாரணை நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக,  சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என 230க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.குற்றம் சாட்டப்பட்ட  மனோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேல்விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்று கோரினார்.  இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நிலைகுறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு