விகேடி சாலை விரிவாக்க பணிக்காக கோலியனூரில் அரசு பள்ளி கட்டிடம் இடிப்பு இட நெருக்கடியில் பயிலும் மாணவர்கள்

*2 ஆண்டுகளாகியும் இழப்பீடு வழங்கவில்லைவிழுப்புரம் : விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்கு வழி சாலை பணிக்காக இடிக்கப்பட்ட அரசு பள்ளி  கட்டிடத்திற்கு  இரண்டு ஆண்டுகளாகியும் ரூ.80 லட்சம் இழப்பீட்டு தொகை  வழங்காததால்  மாணவ, மாணவிகள் இட நெருக்கடியில்  படித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி-தஞ்சாவூர்  இடையேயான 162 கி.மீ தேசிய  நெடுஞ்சாலை (விகேடி சாலை), தங்க நாற்கரச் சாலைத்  திட்டத்தின் கீழ் 4  வழிச்சாலையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணிக்காக   இச்சாலை 2009ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.   2013ம் ஆண்டு ரூ.1,200 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பந்தம்   கோரப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில்தொய்வு ஏற்பட்டதால்   ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் ஒருவழியாக நிலம்   கையகப்படுத்தப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் நியமிக்கப்பட்டு 2018ம் ஆண்டு முதல்   கட்டுமானப் பணிகள் தொடங்கின. 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம் எடுத்தவர் பணிகளை மேற்கொள்ளாமல் சென்று விட்டதால்   தற்போது கிடப்பில் உள்ளன. இதனால் இச்சாலையில் ஆங்காங்கே பணிகள் கிடப்பில்   போடப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலை   அகலப்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்ட வீடு மற்றும் அரசு   கட்டிடங்களுக்கானஇழப்பீட்டு தொகை இன்னும் சரிவர வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக   இச்சாலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு இன்னும்   இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில்   சாலை விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய   துவக்கப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.   இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக நகாய் நிறுவனம் ரூ.80   லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என  தெரிவித்திருந்தனர். ஆனால் இரண்டு   ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் ஒரே ஒரு வகுப்பறையில்   நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இட நெருக்கடியில் படித்து   வருகிறார்கள். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நகாய் நிறுவனத்தை   தொடர்பு கொண்டு கேட்டும் எந்த பலனுமில்லை. தொடர்ந்து  அலைகழிக்கப்பட்டு   வருகிறார்கள். ஆனால் இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவ,   மாணவிகள் தொடர்ந்து இட நெருக்கடியில் படித்து வரும் அவல நிலை உள்ளது. எனவே   மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி இடிக்கப்பட்டதற்கான   இழப்பீட்டு தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை   வைத்துள்ளனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்