Sunday, June 30, 2024
Home » வாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும்… நிஜமாகியவையும்!

வாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும்… நிஜமாகியவையும்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி டாக்டர் அக்சிலியா பௌலினவாழ்வியல் போராட்டத்தில் எல்லாமே போட்டி என மாறியுள்ள இந்த உலகில், தனக்கான ஒரு தனி இடம் தேடிக் கொள்வதற்கான முதல் படிக்கட்டில் இப்போதுதான் அடி எடுத்து வைத்துள்ள 22 வயது அக்சிலியா பெளலின, தனது பெருங்கனவை விவரித்த போது, இவரால் சாத்தியப்படுமா எனும் சந்தேகம் நமக்கும் எழுந்தது.புதுப்புனலாக புறப்பட்டுள்ள அவரது பயணம் சாத்தியப்படக் கூடிய வகையில், சுகாதார ஆலோசகராக அவர் ஆற்றி வரும் அருந்தொண்டு அவரது கனவை வெகு விரைவில் நனவாக்கும் என்பதே நிதர்சனம். ‘‘கற்பித்தல் என்பது பரம்பரையாக என்னுடைய குடும்பத்தில் ஊறிப்போன விஷயம். அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை என உறவினர்கள் பலரும் ஆண்டாண்டு காலமாக கல்வித் தொண்டு ஆற்றி வருகின்றனர். அதனால் தான் குடும்பத்தில் பாசமும், அன்பும், மதிப்பும் எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கும். அதோடு தாத்தா, பாட்டி உள்ளிட்ட பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன் கால் நூற்றாண்டாக கல்வித் தொண்டு மட்டுமன்றி சமுதாயத்திலும் அக்கறை எடுத்து பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.பூர்வீகம் திருநெல்வேலி, கோவில்பட்டி. நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை. எல்.கே.ஜி தொடங்கி பிளஸ்2 வரை குன்றத்தூரில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளியில் தான் படிச்சேன். பள்ளி பாடங்களை தவிர்த்து உழைப்பு மற்றும் பிழைப்பு சார்ந்த பல்வேறு சிறப்பு பாடப் பிரிவுகள் சார்ந்த தொழிற்பயிற்சியும் பள்ளியில் அளிக்கப்பட்டது. குறிப்பாக வாழ்வியல் சார்ந்த பல அம்சங்களை அதிகளவில் போதித்தனர். அதனால் தான் பள்ளியில் படிக்கும் போதே சமுதாயத்துக்கு நம்மால் இயன்ற நல்லது செய்ய வேண்டும் என உறுதி பிறந்தது.மருத்துவராக வேண்டும் என்பது தான் எனது சிறு வயது கனவாக இருந்தது. ஆசிரியர்களாக பெற்றோர் இருந்ததால் எனக்கு கல்வியில் முழு சுதந்திரம் அளித்தனர். மேலும் எனது கனவு, விருப்பத்துக்கும் அவர்கள் குறுக்கிடாமல் இருந்ததோடு, என்னை தீவிரமாக ஊக்குவித்து தூண்டினர். கனவுபடி பல் மருத்துவம் முடித்து, டென்டிஸ்ட் பட்டமும் பெற்றேன். மருத்துவ படிப்பு ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், உடன் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நல்லாசியுடன் குறித்த காலத்தில் டாக்டர் பட்டம் என்னால் பெற முடிந்தது.மருத்துவ கல்லூரியில் படித்த போது மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக பல் மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டேன். கற்பதற்கு அங்கு புதுப்புது சமாசாரங்கள் நிறைய கிடைத்தது. பல் மருத்துவ தொழிலில், அந்த மாநாட்டில் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த அரிய பெரும் வாய்ப்பாக கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது வாழ்வில் அது மிகப்பெரும் திருப்புமுனை என்றே கூற வேண்டும்.சிறு வயது கனவை எப்படி பூர்த்தி செய்ய முடிந்ததோ அதுபோல பக்குவப்பட்ட வயதில் அதாவது கல்லூரி காலத்தில் எனக்கு தோன்றிய கனவையே வாழ்வின் பெருங்கனவாக மட்டுமன்றி லட்சியமாகவும் கருதுகிறேன். கருத்தோடு நின்றிடாமல், அதனை செயல்படுத்தும் குறிக்கோளுடன் வாழ்க்கை பயணத்தில் அடி எடுத்து வைத்துள்ளேன்.எனது கனவு எந்த ஒரு காரணத்தாலும் சிதைந்துவிடக் கூடாது என தீர்மானித்ததால், டாக்டர் பணிக்கு என பல் மருத்துவமனையில் சேர விரும்பாமலும், சுயமாக தொழில் தொடங்குவதையும் தவிர்த்து, எந்த பள்ளி என்னை கற்பித்து கரை தேற்றியதோ, அங்கு படிக்கும் இளம் பருவ மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி எனது பெருங்கனவுக்கு அடித்தளம் இட வேண்டும் என ஆசைப்பட்டு நான் படித்த பள்ளியின் நிர்வாகத்தை அணுகினேன்’’ என்றவர் தான் படித்த பள்ளியின் மருத்துவ சுகாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.‘‘மாணவர்கள் மத்தியில் இந்தப் பெண்ணால், என்ன பெரிய சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி விட முடியும் எனக் கருதாமல், எனது பெருங்கனவுக்கு மதிப்பளித்து மருத்துவ சுகாதார ஆலோசகர் எனும் பதவியில் பள்ளி என்னை அமர்த்தியது.;IGCSE, CBSE மற்றும் TNBSE மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் அளித்து வருகிறேன்.இங்கு ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். கால சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றங்கள் இப்போதெல்லாம் 6 அல்லது 7ம் வகுப்பு படிக்கும் வயதிலேயே, சிறார்களை விடலைப் பருவ வயதினராக ஆக்குகிறது. அதாவது பூப்படைவது என்பது பெண்ணுக்கு எப்படி உடல் சார்ந்த மாற்றமோ அது போல அதே பருவத்தில் தான் மீசை அரும்பும் பருவ வயதினனாக ஒரு சிறுவனும் மாற்றம் காண்கிறான். இந்தப் பருவம் சார்ந்த புரிதல் என்பது சிறுமிக்கோ அல்லது சிறுவனுக்கோ ஒருவித தர்மசங்கடம் அளிக்கிறது. வெளியில் சொல்ல முடியாமலும், அதேநேரம் எப்படி, ஏன் இது நிகழ்ந்தது எனும் புரிதல் இல்லாமல் ஒருவித அழுத்தம் அவர்களை ஆட்டுவிக்கிறது. பருவ மாற்றத்தை சிறுமிகளுக்காவது தாய் அல்லது வீட்டில் உள்ள இதர பெண்கள் ஓரளவுக்கு புரியவைக்கின்றனர். ஆனால் சிறுவர்களை இந்த வயதில் தான் சீர்திருத்த வேண்டும் எனும் சிந்தனை பலருக்கும் இல்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.சுய தூய்மை குறித்து பெண் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டும். இருவரின் சுகாதாரம் குறித்து பள்ளிக் கல்வியில் சில அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பது எனக்குள் இருக்கும் ஒரு தவிப்பாகும். ஜுரம் வந்தால் டோலோபர், இருமல் என்றால் குரோசின் என மருத்துவரை அணுகி ஆலோசனை பெறாமல், பலரும் தங்கள் இஷ்டம் போல மருந்து மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். பிற்காலத்தில் பல்வேறு உடல் குறைகள் இதனால் ஏற்படும் எனும் அபாயம் குறித்து யாரும் கவலைப்படுவது கிடையாது. எனவே, மாணவ பருவத்தில் உடல் தூய்மை, மனத்தூய்மை குறித்து விழிப்புணர்வு உருவாக்கி வருகிறேன்.சிறுமிகளுக்கு உடல் சார்ந்த மாற்றங்களையும் அதனால் ஏற்படும் மனச்சோர்வையும் போக்கி அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விழிப்புணர்வும், அதே சிந்தனையுடன் சிறுவர்களையும் அணுகி, என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட்டால் ஸ்ட்ரெஸ் நீங்கும் எனவும் ஆலோசனை வழங்குகிறேன்.குறிப்பாக இந்த கொரோனா கால கட்டத்தில் பருவ மாற்ற வயதினர் பல வித அல்லல்களை சந்திக்கின்றனர். எங்களது பள்ளி மூலமாக லாக்டவுன் மாதங்களில் 25க்கும் அதிகமான ‘வெபினார்’ நடத்தி வீடியோ கான்பரன்சிங்கில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் சமுதாய சிந்தனை, பருவ வயது மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறேன்.வாழும் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். பெரிதாக தனித்து எதையும் சாதிக்க முடியாமல் போனாலும், குறைந்தபட்சம் ஒரு சில நூறு மாணவர்களுக்கு விழிப்புணர்வு நாம் ஏற்படுத்தினால், அது ஒரு தொடர் சங்கிலியாக பல நூறு ஆயிரம் சக மாணவர்களுக்கும் பரவி, சமுதாயம் முழுவதும் இளம் பருவத்தினருக்கு அவரது வயது சார்ந்த புரிதலை தெளிவாக்கும்.தற்போது நான் படித்த பள்ளியில் மருத்துவ சுகாதார ஆலோசகரா பணிப்புரிந்து வருகிறேன். எதிர்காலத்தில் நான் தனியாக மருத்துவத் துறையில் செயல்பட்டு வந்தாலும், சமுதாயத்திற்காக நான் ஆற்றும் சேவையில் இருந்து எப்போதும் பின்தங்க மாட்டேன். காரணம் அது தான் என்னுடைய வாழ்வின் பெருங்கனவு. அந்த கனவை நான் எப்போதும் ஆற்றிக் கொண்டு தான் இருப்பேன்’’ என்றார் டாக்டர் அக்சிலியா பௌலின. தொகுப்பு: தோ.திருத்துவராஜ்படங்கள்: ஜி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi