வாழ்வது தமிழாகட்டும்…

தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், வஉசி, பாரதியார், வேலுநாச்சியார், மருதுபாண்டியர் சிலைகள் இடம் பெற்றிருந்த தமிழக அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேநேரம் அந்த அலங்கார ஊர்தி தமிழகத்தில் நடக்கும் அணிவகுப்பில் கட்டாயம் இடம் பெறுமென அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அறிவித்ததோடு மட்டுமல்ல…. சென்னையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் அந்த அலங்கார ஊர்தியை கம்பீரமாக அணிவகுத்து வரவும் செய்தார் முதல்வர்.வஉசி, பாரதியார், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்  ஆகிய தேச விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுடன், தேச மக்களின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட, அதற்காகவே வாழ்ந்த தந்தை பெரியார் சிலையையும் ஊர்தியில் இடம் பெற வைத்தது அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஏற்கனவே, தமிழக அரசுப்பணிகளில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கும் சட்டத்திருத்தம், கோயில்களில் தமிழில் அர்ச்சனை, தமிழர்களின் பாரம்பரியங்களை உலகுக்கு பறை சாற்றும் வகையில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது, செம்மொழி சாலை அறிவிப்பு, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் புதுப்பிப்பு, அரசுப்பள்ளிகளில் தமிழ் வழி படித்த மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு என முதல்வரின் அறிவிப்புகள் தமிழ் மொழி மீதான அவரது பற்றை வெளிக்கொணர்ந்துள்ளது.இந்த நேரத்தில், மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேச்சு மிகவும் கவனிக்கத்தக்கது. திமுக அரசு இந்தி உட்பட மற்ற மொழிகளுக்கு எதிரானது என்ற கருத்தை, தனது பேச்சின் மூலம் உடைத்தெறிந்துள்ளார். ‘‘‘‘எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல. இந்தியின் ஆதிக்கத்தை, திணிப்பை எதிர்க்கிறோம். மொழி ஒருவரது விருப்பம் சார்ந்து இருக்க வேண்டும். ஒரே மொழிதான் பேச வேண்டுமென்ற கொள்கைப்படி இந்தியை திணிக்க பார்க்கின்றனர். டெல்லி குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை நிராகரித்தது தொடர்பான விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. வீரமங்கை வேலுநாச்சியார், மருதுபாண்டியர், மகாகவி பாரதியார், வஉசியை யார் என கேட்க இவர்கள் யார்?  பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மண் தென்னாடு. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதற்காக அனைத்து தியாகத்துக்கும் நாம் தயாராக இருப்பவர்கள். நாம் அரசியல் இயக்கமாகச் செயல்படுவதும் தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதும் இத்தகைய நோக்கங்களுக்காகத்தான். திமுக ஆட்சியில் இருக்கும் காலம் என்பது அன்னைத் தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமைய வேண்டும்’’ என பேசி உள்ளார். ஒரு முக்கிய கட்சியின் தலைவராக, மாநில முதல்வராக, தமிழக மக்களின் வாழ்வுரிமை பாதுகாவலராக ஒரு முதல்வர் கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த வரமென்றே கூற வேண்டும்….

Related posts

சிக்கலில் சித்தராமையா

அவசரம் ஏன்?

நம்பிக்கை நட்சத்திரம்