Sunday, June 30, 2024
Home » வாழ்க்கை வளமாக சித்திரை மாத வழிபாடுகள்..!

வாழ்க்கை வளமாக சித்திரை மாத வழிபாடுகள்..!

by kannappan

ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும். அதனால்தான் நாம் சித்திரை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். பிரம்மதேவர் உலகைப் படைத்தது சித்திரை முதல் நாளில் என நூல்களில் குறிப்பிட்டுள்ளன. இத்தினத்தில் திறந்த வெளியில் சூரிய பகவானுக்குப் பூஜைகள் செய்வது வழக்கம். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சூரிய வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறும். இத்தனை சிறப்புகள் கொண்ட சித்திரை மாதத்தின் மேலும் பல சிறப்புகள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.*தமிழ்ப்புத்தாண்டில், வீட்டிலுள்ள பெரியவர்கள் பஞ்சாங்கம் வாசிப்பதும், அதை சிறியவர்கள் கேட்பதும், காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம். இதை படிப்பதன் மூலம் திருமகள் அருள் கிட்டும், வினைகள் அகலும். ஆயுள் அதிகரிக்கும், நோயற்ற வாழ்வு உண்டாகும், காரியம் சித்தியாகும். எனவே தினமும் பஞ்சாங்கம் படிப்பது அளவற்ற நன்மைகளைத் தரும். தினமும் படிக்க முடியாதவர்கள், சித்திரை முதல் நாளில் மட்டுமாவது, வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டுவிட்டு, அன்றைய தினத்துக்கான பஞ்சாங்கக் குறிப்பை படிக்கவேண்டும். வீட்டில் படிக்க வசதி இல்லாதவர்கள், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கலாம்.*தமிழ் வருடப் பிறப்பு அன்று, வேப்பம்பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இனிப்பும், புளிப்பும், கசப்பும் கலந்த இந்தப் பச்சடி, வாழ்வே இனிப்பும், கசப்பும், புளிப்பும் கலந்ததுதான் என்னும் தத்துவத்தை உணர்த்துகின்றது.*சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியே “சித்ரா பௌர்ணமி” ஆகும். அன்று, சில ஊர்களில் முழு நிலா வெளிச்சத்தில் ஒரு வகையான உப்பு பூமியில் இருந்து வெளி வரும். இதை “பூமி நாதம்” என்று சித்தர்கள் அழைப்பர். அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கின்றது என்று சித்தர்கள் கண்டுபிடித்தனர். அதனால் இந்நாளை சித்தர்கள் பௌர்ணமி என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இன்றும் பூமிநாதம் ரசாயன மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுகிறது.*நாம் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் கணக்கெடுத்துக் கொண்டும் இருக்கிறான் சித்ர குப்தன் என்பார்கள். அவர் தோன்றியதும் சித்ரா பௌர்ணமியன்றுதான். அன்றைய நாளில் மக்கள் சித்திர குப்தனுக்காக விரதம் இருந்து, “எங்கள் பாவ கணக்கை குறைத்து, மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்க வழித் துணையாக இருப்பா” என்று வேண்டிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.*சித்திரை மாதம் என்றாலே மதுரை மக்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த மாதம் முழுவதும், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது எனப் பல விசேஷங்கள் உண்டு. மீனாட்சி திருக் கல்யாணத்தைக் காண, அண்ணன் அழகர் சகலவிதமான ஏற்பாடுகளுடன் புறப்படுவார். தான் செல்வதற்கு முன்பே மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடந்துவிட்டது என்னும் தகவல் வைகைக் கரையை அடையும்போது, அவருக்கு வந்து சேரும். கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர், அப்படியே வண்டியூர் போய்விடுவார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வெளியூரில் இருந்து மக்கள் அலை அலையாக வருவர்.*அட்சய திரிதியை வரும் பொன்னான மாதமும் சித்திரை மாதம் தான். பிரம்மதேவர் தனது சிருஷ்டித் தொழிலை துவங்கியதும் இந்நாளில்தான். மிகவும் புண்ணியமான இந்நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள், அரிசி, கோதுமை, தயிர், மோர், குடை, ஆடைகள், தானியம், பழம் போன்றவற்றை வறியவர்களுக்குத்  தானம் செய்வதால் என்றும் அழியாத செல்வம் நம் வாழ்வில் தங்கும் என்பர்.*சித்திரை சுக்லபட்ச அஷ்டமியில்தான் அம்பிகை அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நாளில் அம்மனை போற்றி வழிபடுவதால் சிறந்த பலனையும் தெய்வ அனுக்கிரஹத்தையும் பெறலாம். ஆடல் அரசனைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றுள் சித்திரை திருவோணத்தில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும் சிறப்பான அபிஷேகமும் ஒன்று.*காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகள், மாதப்பிறப்பு, மகா பெரியவா பிறந்த நாள் போன்ற நாட்களில், கோயிலின் வெளிப் பிராகாரத்தில் மட்டுமே தங்கத்தேர் உலா வரும். ஆனால், சித்திரை முதல் நாளன்று மட்டும், தங்கத்தேர், நான்கு ராஜ வீதியிலும் உலாவரும். புனிதமான சித்திரை மாதத்தில் முறையான வழிபாடுகளையும், ஆலய தரிசனமும் செய்து உங்கள் வாழ்வை வசந்த காலமாக மாற்றிக்கொள்ளுங்கள்.தொகுப்பு: சீனு

You may also like

Leave a Comment

4 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi