வாலிபர் கொலையில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலை அருகே நடந்த

திருவண்ணாமலை, ஆக.10: திருவண்ணாமலை அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் அருள்குமரன்(37). இவர், கடந்த மே 29ம் தேதி திருவண்ணாமலை -மணலூர்பேட்டை சாலை நவம்பட்டு ப.உ.ச.நகர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வட்டிக்கு கடன் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் இளங்கோவன்(33), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாமலைவாசன்(31), சங்கராபுரம் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் மகன் சூர்யா(22), சங்கராபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சரத்குமார்(22), தங்கராஜ் மகன் லோகநாதன்(32) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், கொலை வழக்கில் கைதான இளங்கோவன், மாமலைவாசன், சூர்யா, சரத்குமார், லோகநாதன் ஆகிய 5 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் உள்ள 5 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான நகல் போலீசாரால் வழங்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை