வாலிபரை கடத்தி கொலை 2 பேருக்கு ஆயுள் தண்டனை திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

 

திருப்பூர், பிப்.14: மயிலாடுதுறை மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அஜித் (28). இவர், திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வைத்து வேலை செய்து வந்தார். இவரிடம் செங்கல்பட்டு கால்வாய் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (19), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஜம்புலி புதூரை சேர்ந்த கார்த்திக் (29) ஆகியோர் வேலைக்கு சேர்ந்தனர். இவர்கள் 2 பேரும் அஜித் தங்கியிருந்த அறையில் தங்கியிருந்தனர்.

அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த அஜித்தின் ரூ.60 ஆயிரத்தை ஆகாஷ் திருடினார். இதை அறிந்ததும் 2 பேரையும் அஜித் வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் அஜித்தின் இருசக்கர வாகனம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை ஆகாஷ் திருடி சென்றார். இதனால் ஆகாஷ் மீது அஜித்துக்கு கோபம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அஜித், கார்த்திக்குடன் சேர்ந்து ஆகாசை கொலை செய்த திட்டமிட்டார்.

அதன்படி, கடந்த 11-8-2022 அன்று ஆகாசை மது அருந்தலாம் வா என்று கூறி இருசக்கர வாகனத்தில் குன்னத்தூருக்கு அஜித்தும், கார்த்திக்கும் அழைத்துச்சென்றனர். மதியம் 3.15 மணி அளவில் அங்குள்ள ஏரிக்கரை காட்டுக்குள் வைத்து கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் 2 பேரும் சேர்ந்து ஆகாசை கொலை செய்து விட்டு தப்பினர். இது குறித்து குன்னத்தூர் போலீசார் கொலை மற்றும் ஆள் கடத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அஜித், கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்காக 2 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், ஆள் கடத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை