வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பி.பி.ஜி.டி சங்கர். இவர், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் மீது ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சங்கரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இருங்காட்டுக்கோட்டை பகுதியில் பதுங்கி இருந்த வளர்புரம் பகுதியை சேர்ந்த விஜய், ஞானபிரசாத், சுரேஷ், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், அன்பரசன், டேவிட்சன் ஆகிய 6 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு, வீச்சருவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்களிடம் விசாரணையில் செய்ததில், சங்கரிடமே இருந்து கொண்டு தொழிலதிபர்களை மிரட்டுவது, தொழில் நிறுவனங்களை மிரட்டி ஸ்க்ராப் எனப்படும் கழிவு பொருட்களை எடுப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அண்மையில் சங்கருக்கும் அதேபகுதியை சேர்ந்த விஜய், ஞானபிரசாத் ஆகியோருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னிச்சையாக தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வந்தனர். மேலும், இவர்கள் ரவுடியாக வலம் வருவதற்கு பி.பி.ஜி.டி.சங்கர் இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்து சென்னை குன்றத்தூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவரிடம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்கு பயிற்சி எடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே ஞானபிரசாத், விஜய் கூட்டாளியான வளர்புரம் பகுதியை சேர்ந்த ராஜ்கிரன் என்பவனை சங்கர் அழைத்து என்னையே கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளீர்களா என உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் ராஜ்கிரன் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் சங்கர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பி.பி.ஜி.டி சங்கரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்….

Related posts

ஸ்டார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காந்திஜெயந்தி விடுமுறை ‘கட்’ 82 நிறுவனங்கள் மீது வழக்கு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நிர்வாகி: இளைஞர்கள் மடக்கியதால் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்