வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.4.15 லட்சம் மோசடி

 

சேலம், மே 8: சேலத்தில் பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4.15 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காடையாம்பட்டி அருகேயுள்ள சரக்கபிள்ளையூர் பெரியநாகலூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (29). இவரது செல்போனுக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நம்பரை பிரவீன்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதில் பேசிய மர்மநபர், பண முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் திரும்ப வழங்குவோம் எனக்கூறி, பண முதலீட்டை பெற்றுள்ளார். முதலில் செலுத்திய குறைவான தொகைக்கு அதிகளவு பணத்தை திரும்ப கொடுத்துள்ளனர். இதனால், பிரவீன்குமார் அந்த நபர் தெரிவித்த இணையதளம் மற்றும் வங்கி கணக்குகளில் ஆன்லைன் மூலம் ரூ.4,15,376ஐ முதலீடு செய்துள்ளார். பின்னர், அந்த பணமும், அதற்கான வட்டி உள்ளிட்ட கூடுதல் தொகையும் பிரவீன்குமார் வங்கி கணக்கிற்கு திரும்ப வரவில்லை.

அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரவீன்குமாரிடம் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்டது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜூசிங் எனத்தெரியவந்தது. ஆனால் மோசடி செய்யப்பட்ட பணம், ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் உள்ள 4 பேரின் வங்கி கணக்கில் வரவாகியுள்ளது. அதனால், இம்ேமாசடியில் ஈடுபட்ட கும்பல் பற்றி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முன்னாள் படைவீரர் நல அலுவலக தகவல்

மனு கொடுக்கும் போராட்டம்

புளிக்குழம்பு சாப்பிட்ட மாணவர் பலி