வார விடுமுறையையொட்டி வெளியூர் பயணம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: 1 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன

செங்கல்பட்டு, ஜூலை 21: தொடர் விசேஷங்களையொட்டி ஏராளமான பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 1 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் ஆடி மாத முதல் ஞாயிறு என தொடர் விசேஷங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு முதலே கார், ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்குச் சென்றதால் நேற்று பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து மேலும் அதிகரித்து கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், சுங்கச்சாவடியைக் கடக்க 30 நிமிடங்களுக்கு மேலானதால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க வேண்டும், என்று வாகன ஓட்டிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி