வாரிய தலைவர் பதவிக்கு வரிந்துகட்டி நிற்கும் புல்லட்சாமியின் உறவினர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புல்லட்சாமியின் உறவுகள் கோபத்தில் இருக்கிறார்களாமே.. என்ன காரணம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘புல்லட்சாமி  ஆட்சியில் சட்டசபை கதவை திறந்துவிடும் பணிக்கு பயங்கர போட்டியாம். நான்கு  பக்கம் நுழைவாயில் கொண்ட அவரது அறையில் நிற்கும் துவாரக பாலகர்களில்  தலைமை யாருக்கு என்பதில் கடந்த சில நாட்களாக பனிப்போர் நிலவி வந்தந்து.  சாமியை பார்க்க யாரை அனுமதிப்பது என்பதில் மோதல் ஆரம்பித்து விட்டதாம்.  இதில் அமலமான ஒருவர் நான்தான் மெயின் கேட்டில் நிற்பேன். மற்றவர்கள்  எல்லாம் கதவை திறந்துவிடுவதோடு நின்றுவிட வேண்டும் என உத்தரவாம். இந்த  மேட்டர் தெரியாத புல்லட்சாமியின் உறவுக்காரர் சுந்தரமானவர், தனக்கு  வேண்டியவரை அழைத்து கொண்டு புல்லட்சாமியை பார்க்க சென்றாராம். ஆனால்  துவாரபாலகர்கள் அனுமதிக்கவில்லை. நான் யார் தெரியுமா என பதிலுக்கு கேட்க,  நீங்க என்னவாக இருந்தாலும் ஓரமா போய் நில்லுங்க என கூறிவிட்டாராம்.  பின்னர்  புல்லட்சாமிக்கு விஷயம் தெரிந்து, உள்ளே அனுமதிக்கப்பட்டனராம். இதன்பின்பு  வெளியே உறவுக்காரருக்கும், கேட் கீப்பருக்கும் ஏற்பட்ட சண்டை கைகலப்பில்  முடிந்துவிட்டது. சட்டசபை காவலர்கள் விலக்கி விடும் அளவுக்கு எல்லை  மீறிவிட்டதாம். இது வெளியே தெரியவர புல்லட்சாமியின் உறவுகள் கடும்  கோபமடைந்துவிட்டதாம். இனி ஒதுங்கி பயனில்லை. எல்லோரும் சட்டசபைக்கு  போவோம் என தீர்மானம் போட்டு இருக்கிறார்களாம். குறிப்பாக வாரியம் உள்ளிட்ட  முக்கிய பதவிகளை புல்லட்சாமியின் உறவுகள் கைப்பற்ற திட்டம் போட்டு காய் நகர்த்தி  வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புறக்காவல் நிலையம் அமைக்க இடமில்லைனு சொல்லிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டம் திங்கள்நகரில் பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 65 கடைகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 25 கடைகள் வரை ஏலமிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இரணியல் போலீசாருக்கான புறக்காவல் நிலையம் இருந்தது. பழைய  கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் போதே, 6ம் நம்பர் கடை புறக்காவல் நிலையத்துக்கு என ஒதுக்கப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப அந்த கடையின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது நடந்த ஏலத்தில், புறக்காவல் நிலையத்துக்கு என ஒதுக்கப்பட்ட கடையையும் ஏலம் போட்டு விட்டனர். காவல்துறையில் இருந்து எங்களுக்கு எந்தவித கடிதமும் கொடுக்கவில்லை.  இதனால் புறக்காவல் நிலையத்துக்கு இடம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது எனக்கூறி உள்ள பேரூராட்சி நிர்வாகம், தற்போது பிரச்னைக்குரிய ஒரு கட்டிடத்தில் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளனர். பஸ் நிலையத்தில் பிரச்னை இல்லாமல் பார்க்க வேண்டும். திருட்டு, கொள்ளை, கொலை, அடி தடி என நடந்தால் காவல்துறையை குற்றம்சாட்டுபவர்கள், புறக்காவல் நிலையத்துக்கு என ஒதுக்கப்பட்ட கடையை ஏலம் போட்டு விட்டு, இப்போது பிரச்னைக்குரிய இடத்தை தந்து, கடைசியில் அதுவும் இல்லாமல் போய் விடும் நிலைக்கு வந்துள்ளது. கலெக்டர், எஸ்பி என உயர் அதிகாரிகள் வரை புகார் போன பின்னரும் இன்னமும் இந்த பிரச்னை தீர்ந்தபாடில்லை என போலீசார் கூறுகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதுசரி கிரிவலம் மாவட்ட விவகாரம் என்ன…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இங்க கஞ்சா,  சூதாட்டம், மணல் கொள்ளைன்னு குற்றசம்பவங்கள் அதிகம் இருந்தது. இதை தடுக்க மாவட்ட காவல்துறையில் எஸ்பியோட நேரடி காட்டுப்பாட்டுல தனிப்பிரிவு செயல்பட்டு  வருது. இந்த தனிப்பிரிவுல இருக்குற காக்கிகளுக்கு, யார் கஞ்சா  விக்கிறாங்க, யார் சூதாட்டம் நடத்துறாங்க. யார் மணல் கொள்ளையடிக்கிறாங்க.  எந்த ரூட்டுல கடத்தல் நடக்குதுன்னு எல்லா விவரங்களையும் பிங்கர் டிப்ஸ்ல  வெச்சிருக்காங்களாம். ஆனா, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிங்களுக்கு  சொல்லமாட்டாங்களாம். ஏன்னா, தனிப்பிரிவு காக்கிகளுக்கு சேரவேண்டியது, மாதம்தோறும் தவறாம சரியாக சேருதாம். இதனால, கரன்சியே கடமையா, நினைச்சு வேலை  செய்றாங்களாம். இப்படி பல ஆண்டுகளாக தனிப்பிரிவு காக்கிங்க ஒரே  காவல்நிலையத்துல பழம் தின்னு கொட்ட போட்டு, அந்த கொட்டையும் திரும்ப மரமாக  வளர்ற வரைக்கும் பணியாற்றி வர்றாங்களாம். வழக்கமா 3 ஆண்டுகளுக்கு மேல ஒரே இடத்தில்  பணியாற்றும் காக்கிகளை பணியிடமாற்றம் செய்வாங்க. ஆனா, கிரிவலம்  மாவட்டத்துல, ஒரு ஸ்டேஷன்ல இருந்து, பக்கத்துல இருக்குற ஸ்டேஷனுக்குத்தான்  பணியிடமாற்றம் செய்றாங்களாம். அடுத்த ஓரிரு வருஷத்துல திரும்பவும் அதே  காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றமாகி வர்றாங்களாம். இப்படி, பணியிடமாற்றம்,  சப்டிவிஷனைக்கூட தாண்டுறதில்லையாம். புதிய எஸ்பி என்னவோ நடவடிக்கை  எடுக்குறாராம். ஆனா, அவருக்கு உண்மை தகவலை சொல்ல வேண்டிய இடத்துல, நேரடியா  அவரோட தொடர்புல இருக்குற தனிப்பிரிவு காக்கிங்க இப்படி இருந்தால், என்னத்த  செய்றதுன்னு நேர்மையான காக்கிங்களே புலம்புறாங்க. கிரிவலம் மாவட்டத்த  கஞ்சா, சூதாட்டம், மணல் கடத்தல் பிடியில இருந்து காப்பாத்த, தனிப்பிரிவை  களையெடுத்தாத்தான் முடியும்னு காங்கிரஸ் காரங்களே சொல்றாங்க..’’ என்றார்  விக்கியானந்தா. …

Related posts

பிரசாரத்தில் வலிய வந்து வம்பில் சிக்கிய பெண் வேட்பாளர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா