வானிலை ஈரோட்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

ஈரோடு, ஜூலை 16: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, காமராஜரின் பிறந்த நாளான நேற்று ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில், அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் குறித்த கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது நன்கொடையாளர்கள் வழங்கிய தினசரி குறிப்பேடு, பெல்ட், டை, அடையாள அட்டை, பேட்ஜ் ஆகியவை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாநகராட்சி 3ம் மண்டல தலைவர் சசிகுமார், கவுன்சிலர்கள் ரேவதி, பிரவீணா, ஈரோடு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியை சுமதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாறுவேட போட்டி நடத்தப்பட்டது, இதில் சிறுவர், சிறுமியர் பலரும் காமராஜர் வேடமிட்டு வந்தனர். காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பரிசு வழங்கப்பட்டது. பள்ளி கல்வி துறை சார்பில் கடந்தாண்டு நடந்த மதிப்பீட்டு ஆய்வில் வென்ற நந்தினி என்ற மாணவிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. அம்மாணவி இந்தாண்டு பிளஸ் 1 அதே பள்ளியில் படித்து வருகிறார். விருது பெற்ற மாணவியை பள்ளி ஆசிரியைகள் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஈரோடு திருநகர் காலனி நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் தலைமையாசிரியை அருணாதேவி தலைமையில் நடந்தது. இதில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சியின் 1ம் மண்டல தலைவர் பழனிசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.பழனிசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வைப்பு தொகை ரூ.25 ஆயிரத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பள்ளி மேலாண்மை குழுவிடம் வழங்கினார். முன்னதாக பள்ளியின் ஆசிரியர் விக்டர் செல்வக்குமார் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெனிபர் நன்றி கூறினார். இதேபோல், ஈரோடு கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா பள்ளியின் தலைமையாசிரியை மாலா தலைமையில் நடந்தது. இதில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை