வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் இன்று கரையைக் கடந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிக்கு நகர்ந்து சென்றது. அது தற்போது ஒடிசாவை ஒட்டிய கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது இன்று கரையைக் கடந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் எண்ணூர், சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. தென் மேற்கு பருவமழையின் காரணமாக  நீலகிரி, கோவை,  மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்தது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மற்றும் அதை ஒட்டிய  மாவட்டங்கள் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை