வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

விக்கிரவாண்டி, ஜூலை 12: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குகள் நாளை (13ம் தேதி) எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர்.

தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதால் தமிழகமே இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன் தினம்(10ம் தேதி) வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி விறுவிறுப்பாக நடந்தது. இந்த தேர்தலில் ஆண்கள் 95536 பேர், பெண்கள் 99944 பேரும், இதர வாக்காளர்கள் 15 பேர் என மொத்தம் 1,95,495 பேர் வாக்களித்தனர். இதன்படி 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன் தினம் இரவு கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி மற்றும் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை (13ம் தேதி) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணயளவில் வெற்றி நிலவரம் தெரிந்து விடும். இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி வாக்குகளை எண்ணும் அதிகாரிகளுக்கு இன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பயிற்சி நடக்கவுள்ளது.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை